திருப்பத்தூர் அருகே பஸ்சை நடுரோட்டில் நிறுத்தியதால் போக்குவரத்து பாதிப்பு

திருப்பத்தூர் அருகே பஸ் டிரைவரை தாக்கியதால் நடுரோட்டில் பஸ்சை நிறுத்தி்னார். இதனால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

Update: 2022-05-12 17:24 GMT
திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே பஸ் டிரைவரை தாக்கியதால் நடுரோட்டில் பஸ்சை நிறுத்தி்னார். இதனால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

தகராறு

திருப்பத்தூர் டவுன் ஆரிப்நகர் பகுதியைச் சேர்ந்தவர் சவூகத் அலிகான். இவரது மகன் சாதிக் அலி (வயது 24). இவர் தனது குடும்பத்துடன் காரில் கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சேலம் கோட்டத்தை சேர்ந்த அரசு பஸ் கிருஷ்ணகிரியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி வந்தது. பஸ்சை டிரைவர் பெரியசாமி ஓட்டி வந்தார்.

கசிநாயக்கன்பட்டி பகுதியில் சாதிக் அலி காரும், அரசு பஸ்சும் நேர் எதிரே வந்துள்ளது. அப்போது அரசுபஸ் டிரைவரை, சாதிக் ஆபாச வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. இதில் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் பஸ் புறப்பட்டு சென்றது. 

டிரைவர் மீது தாக்குதல்

சாதிக் தனது ஆதரவாளர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்து அரசு பஸ் எண்ணை குறிப்பிட்டு திருப்பத்தூர் நோக்கி வந்து கொண்டிருக்கிறது. பஸ்சை நிறுத்துங்கள் என்று கூறி உள்ளார். அதன்படி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் அருகே பஸ்சை நிறுத்தி, அரசு பஸ் டிரைவர் பெரியசாமியை சரமாரியாக அடித்து உதைத்துதாக தெரிகிறது. 

உடனே டிரைவர் பெரியசாமி பஸ்சை நடுவழியில் நிறுத்திவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இதன் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்தும் திருப்பத்தூர் தாலுகா சப்- இன்ஸ்பெக்டர் அகிலன் சம்பவ இடத்துக்கு வந்தார்.

போலீஸ் தடியடி

அதற்குள் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி கூட் ரோடு அருகே போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் கூட்டம் கூடியது. மேலும் அரசு ஓட்டுனருக்கு ஆதரவாக அ.தி.மு.க. கிளை செயலாளர் அப்புனு என்பரையும், சாதிக்கின் ஆதரவாளர் தாக்கி உள்ளனர்.  

 இதுபற்றி தகவல் அறிந்த திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குமார் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கணேசன், சுரேஷ் பாண்டியன், சரவணன், அதிரடிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.  இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து இருவரும் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்