அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு

நாகர்கோவிலில் அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2022-05-12 17:02 GMT
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பஸ் கண்ணாடி உடைப்பு
நாகர்கோவில் ராணித்தோட்டம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து அண்ணா பஸ் நிலையத்திற்கு பராமரிப்பு பஸ் ஒன்று நேற்று காலை புறப்பட்டது‌. இந்த பஸ்சில் பராமரிப்பு ஊழியர்கள் 4 பேர் இருந்தனர். பொதுப்பணித்துறை அலுவலக சாலையில் பஸ் சென்று கொண்டிருந்த போது அங்கு நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் திடீரென பஸ்சின் பின்பக்க கண்ணாடியில் கற்களை வீசினார்.
இதனால் அந்த பஸ்சின் கண்ணாடி உடைந்து நொறுங்கி விழுந்தது. உடனே பஸ்சில் இருந்த ஊழியர்கள் ஓடி வந்து அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் இதுபற்றி கோட்டார் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பரபரப்பு
கோட்டார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஊழியர்களிடம் இருந்த வாலிபரை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருந்தார். பஸ் மீது கல் வீசுவதற்கு முன்பு அந்த வழியாக சென்ற 2 கார்கள் மீதும் வாலிபர் கற்களை வீசியதாகவும் அதிர்ஷ்டவசமாக கார்கள் மீது அது விழவில்லை எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
மேலும் அந்த வாலிபர் வடசேரி பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் வாலிபரை எச்சரித்து அறிவுரை வழங்கியதோடு, உறவினர்களை வரவழைத்து அவர்களுடன் அந்த வாலிபரை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்