கர்நாடக மேல்-சபையில் காலியாகும் ஆசிரியர்-பட்டதாரிகளின் 4 தொகுதிகளுக்கு ஜூன் மாதம் 13-ந் தேதி தேர்தல்

கர்நாடக மேல்-சபையில் காலியாகும் ஆசிரியர்-பட்டதாரிகளின் 4 தொகுதிகளுக்கு ஜூன் மாதம் 13-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

Update: 2022-05-12 17:01 GMT
பெங்களூரு: கர்நாடக மேல்-சபையில் காலியாகும் ஆசிரியர்-பட்டதாரிகளின் 4 தொகுதிகளுக்கு ஜூன் மாதம் 13-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

13-ந் தேதி தேர்தல்

75 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக மேல்-சபையில் ஆசிரியர் மற்றும் பட்டதாரிகளுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் கர்நாடக வடமேற்கு பட்டதாரிகள் தொகுதி எம்.எல்.சி.யாக நிரானி ருத்ரப்பா, கர்நாடக தெற்கு பட்டதாரிகள் தொகுதி எம்.எல்.சி.யாக ஸ்ரீகண்டேகவுடா, கர்நாடக வடமேற்கு ஆசிரியர்கள் தொகுதி எம்.எல்.சி.யாக அருண் சகாப்பூர், கர்நாடக மேற்கு ஆசிரியர்கள் தொகுதி எம்.எல்.சி.யாக பசவராஜ் ஹொரட்டி ஆகியோர் உள்ளனர். அவர்களின் பதவி காலம் வருகிற ஜூலை மாதம் 4-ந் தேதி முடிவடைகிறது.

இதையொட்டி அந்த ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகளின் 4 தொகுதிகளுக்கு வருகிற ஜூன் மாதம் 13-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது. மனுக்களை தாக்கல் செய்ய 26-ந் தேதி கடைசி நாள். 27-ந் தேதி மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. 30-ந் தேதி மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள். ஜூன் மாதம் 13-ந் தேதி காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும். 15-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.

பசவராஜ் ஹொரட்டி

இந்த 4 தொகுதிகளில் தற்போது கர்நாடக மேற்கு ஆசிரியர்கள் தொகுதியில் உறுப்பினாக உள்ள பசவராஜ் ஹொரட்டி மேல்-சபை தலைவராக உள்ளார். ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த அவர் பா.ஜனதாவில் சேருவதாக ஏற்கனவே அறிவித்துள்ளார். அவர் விரைவில் மேல்-சபை தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிகாரபூர்வமாக பா.ஜனதாவில் சேர இருக்கிறார். 

அதன் பிறகு அவர் கர்நாடக மேற்கு ஆசிரியர்கள் தொகுதியில் பா.ஜனதா சார்பில் மனு தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.எல்.சி. பதவியில் இருந்து ஓய்வு பெறுபவர்களில் நிரானி ருத்ரப்பா. அருண் சாகப்பூர் ஆகியோர் பா.ஜனதா, ஸ்ரீகண்டேகவுடா, பசவராஜ் ஹொரட்டி ஆகியோர் ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்