நாளை கோடை விழா, வாசனை திரவிய கண்காட்சி
கூடலூரில் கோடை விழா, வாசனை திரவிய கண்காட்சி நாளை(வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
கூடலூர்
கூடலூரில் கோடை விழா, வாசனை திரவிய கண்காட்சி நாளை(வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
கண்காட்சி
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களைகட்டி உள்ளது. இதையொட்டி தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தொடர்ந்து கோடை விழா, கண்காட்சி நடைபெற்று வருகிறது.
கடந்த வாரம் கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி மற்றும் கோடை விழா நடைபெற்றது.
கூடலூரில் 9-வது ஆண்டு வாசனை திரவிய கண்காட்சி, கோடை விழா நாளை(வெள்ளிக்கிழமை) தொடங்கி 15-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) வரை 3 நாட்கள் மார்னிங் ஸ்டார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடக்கிறது.
இதையொட்டி கூடலூர் நகரில் காலை 11 மணிக்கு கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளின் ஊர்வலம் நடக்கிறது. தொடர்ந்து கண்காட்சி அரங்குகளை ரிப்பன் வெட்டி திறந்து வைக்கப்படுகிறது.
கலைநிகழ்ச்சிகள்
இந்த கண்காட்சியில் தோட்டக்கலை, வனத்துறை, நகராட்சி, வேளாண் உள்ளிட்ட பல்வேறு துறைகள், சமூக மற்றும் தன்னார்வ அமைப்புகள் சார்பில் 50-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் குழந்தைகளை கவரும் வகையில் ராட்டினங்கள் பொருத்தப்பட்டு உள்ளது. மேலும் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு பிரமாண்டமான முறையில் மேடை அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது.
தொடர்ந்து இரவில் கண்களை கவரும் வகையில் மின்விளக்குகளால், அரங்குகள் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று பார்வையாளர்கள் அமர்ந்து ரசிக்கும் வகையில் நூற்றுக்கணக்கான பிளாஸ்டிக் நாற்காலிகள் போடப்பட்டு உள்ளது.
விளையாட்டு போட்டிகள்
இதற்கிடையே கூடலூர் பகுதியில் மழையும் அடிக்கடி பெய்து வருகிறது. இதனால் கோடை விழா நடைபெறும் மைதானம் சேறும், சகதியுமாக மாறி வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, விழாவிற்கு தேவையான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இதுவரை இல்லாத வகையில் 50-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் பல்வேறு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படுகிறது. மழை தொடர்ந்து பெய்தாலும் அரங்குகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளை பார்வையாளர்கள் மழையில் நனைந்து விடாதபடி ரசிப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது என்றனர்.