நாட்டின் தலைவரை தேர்ந்தெடுப்பதில் இளைஞர்களின் பங்கு முக்கியம்; கவர்னர் தாவர்சந்த் கெலாட் பேச்சு
நாட்டின் தலைவரை தேர்ந்தெடுப்பதில் இளைஞர்களின் பங்கு முக்கியம் என்று கவர்னர் தாவர்சந்த் கூறியுள்ளார்.
பெங்களூரு:
நமது மந்திரங்கள்
தேசிய வாக்காளர் தின விழா பெங்களூருவில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் காணொலி மூலம் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:-
வாக்காளர்கள் ஒவ்வொருவரும் தெளிவான மனநிலையில் வாக்களிப்பது, மற்றவர்களையும் வாக்களிக்க ஊக்குவிப்பது மற்றும் வாக்காளர்கள் யாரும் வாக்களிக்காமல் இருக்க கூடாது என்பது நமது மந்திரங்களாக இருக்க வேண்டும். இளைஞர்கள் ஒவ்வொருவரும் தங்களின் கடமையை உணர்ந்து வாக்களிக்க வேண்டும். நமது நாடு குடியரசு ஆவதற்கு ஒரு நாளுக்கு முன்பு சுதந்திரமான தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டது. இது நமது நாட்டின் பலத்தை காட்டுகிறது.
முக்கியமான பொறுப்பு
ஒரு ஓட்டு போடாவிட்டால் என்ன ஆகிவிடப்போகிறது என்று நினைத்து பலர் வாக்களிப்பது இல்லை. சில நேரங்களில் வெற்றி-தோல்வி ஒரு ஓட்டில் முடிவாகிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தேர்தலில் அனைவரும் பங்கேற்க நமது அரசியல் சாசனம் முக்கியமான பொறுப்பை வழங்கியுள்ளது. இதற்காக நாம் அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
இந்திய தேர்தல் ஆணையம், வாக்களிக்க வேண்டியதின் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகமும் வாக்காளர்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. புதிய வாக்காளர்களை சேர்க்க தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் சிறப்பு முகாம்களை நடத்துகிறது.
இளைஞர்களின் பங்கு
நாட்டின் தலைவரை (பிரதமர்) தேர்ந்தெடுப்பதில் இளைஞர்களின் பங்கு முக்கியமானது. அதனால் இளைஞர்கள் தேர்தலில் தவறாமல் வாக்களிக்க வேண்டும். அதன் மூலம் தாங்கள் பொறுப்பான குடிமகன்கள் என்று வெளிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு தாவர்சந்த் கெலாட் கூறினார்.