தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் கல்லூரி பஸ் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் தனியார் கல்லூரி பஸ் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் 35 மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Update: 2022-05-12 11:48 GMT
பஸ்சில் ‘தீ’

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கல்லூரிக்கு சொந்தமான கல்லூரி பஸ்சில் நேற்று மாலை 35 மாணவர்கள் வீடுகளுக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, பஸ் தாம்பரம்-மதுரவாயல் பைபாசில் எண்ணூரை நோக்கி வந்து கொண்டிருந்த நிலையில், மாங்காடு அடுத்த பரணிபுத்தூர் அருகே சென்ற போது, கல்லூரி பஸ்சின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை கிளம்பியது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த டிரைவர் எபினேஷ் பஸ்சை சாலையின் ஓரமாக நிறுத்தி விட்டு இறங்கி பார்த்த போது, திடீரென பஸ் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

இதைக்கண்டு பீதியடைந்த மாணவர்களும், டிரைவரும் அலறினர். இதையடுத்து பஸ்சுக்குள் இருந்த மாணவர்கள் பதறியடித்தபடி பஸ்சில் இருந்து வெளியே ஓடி வந்தனர். சிறிது நேரத்தில் பஸ் முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்த நிலையில், தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

தகவல் அறிந்ததும் மதுரவாயல் தீயணைப்பு அதிகாரி செல்வன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பஸ்சில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். உரிய நேரத்தில் டிரைவர் பஸ்சை ஓரமாக நிறுத்தி பார்த்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீ விபத்துக்குள்ளான கல்லூரி பஸ் கடந்த 5 தினங்களுக்கு முன்பு தான்ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் வாகன புதுப்பிப்பு சான்று பெறப்பட்டது என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்