மகனை தொடர்ந்து தாய் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது

கஞ்சா வழக்கில் தொடர்புடைய மகனை தொடர்ந்து தாய் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2022-05-12 11:43 GMT
தேனி:

தேனி அருகே உள்ள பாலார்பட்டியை சேர்ந்த திரவியம் மனைவி ராதிகா (வயது 41). அவருடைய மகன் ராகுல் (21). இவர்கள் 2 பேரும் பாலார்பட்டியில் உள்ள ஒரு தனியார் தோட்டம் அருகே, கடந்த மாதம் 7-ந்தேதி கஞ்சா விற்றுக் கொண்டிருந்தனர். அவர்களை, கஞ்சா தடுப்பு தனிப்படையினர் பிடித்தனர். அவர்களிடம் இருந்து 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவர்கள் வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். 

இதுதொடர்பாக வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தாய், மகனை கைது செய்தனர். இவர்கள் மீது ஏற்கனவே கஞ்சா விற்பனை தொடர்பான வழக்குகள் உள்ளன. தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டதால் ராகுல் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

இந்நிலையில், ராதிகா மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டருக்கு, போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே பரிந்துரை செய்தார். அதன்பேரில் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் முரளிதரன் உத்தரவிட்டார். இதையடுத்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராதிகாவை நேற்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் சிறை காவலில் வைத்தனர்.

மேலும் செய்திகள்