அரியானாவில் 4 பேர் கைது: பயங்கரவாத தடுப்பு படை நடவடிக்கை
அரியானாவில் கைதான 4 பேரை மராட்டிய பயங்கரவாத தடுப்பு படை காவலில் எடுக்க நடவடிக்கை எடுக்க உள்ளது.
மும்பை,
அரியானா மாநிலத்தில் உள்ள கர்னால் நகர போலீசார், சமீபத்தில் காலீஸ்தானி பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 4 பேரை கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் பெயர் குர்பிரீத், அமந்தீப், பர்மிந்தர் மற்றும் பூபிந்தர் என்பது தெரியவந்தது.
இவர்களிடம் இருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் 31 துப்பாக்கி தோட்டாக்கள், 3 வெடிக்குண்டு சாதனங்கள், 6 செல்போன்கள் மற்றும் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் கைப்பற்றப்பட்டன. சமீபத்தில், மராட்டிய பயங்கரவாத தடுப்பு படையினர் கர்னாலுக்கு சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், அரியானாவில் கைது செய்யப்பட்ட 4 பேரையும் காவலில் எடுக்க, பயங்கரவாத தடுப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “கைது செய்யப்பட்டோர் மீது ஏற்கனவே மராட்டியத்தில் பல குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எனவே, நிலுவையில் உள்ள அந்த பழைய வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்த அவர்களை காவலில் எடுக்க நாங்கள் முயற்சிப்போம்” என்றார்.