திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம்
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தேரோட்டம்
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் கோவில் 1,800 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. இந்த கோவில் அப்பர், சுந்தார், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் என நால்வரால் பாடப்பெற்ற தலமாக விளங்குகிறது சித்திரை திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் முக்கிய திருவிழாவான 7-ம் நாள் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. வேதகிரீஸ்வரர் திரிபுரசுந்தரி அம்மன் கிழக்கு ராஜகோபுரம் வழியாக வெளியே வந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இதனைத் தொடர்ந்து மிக பெரிய தேரான வேதகிரீஸ்வரர் தேரை திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து இழுத்தனர். அதனை தொடர்ந்து விநாயகர் வேதகிரீஸ்வரர் திரிபுரசுந்தரி அம்மன், முருகன், வள்ளி, தெய்வானை சண்டிகேஸ்வரர் என மொத்தம் 5 தேர்களும் நான்கு மாட வீதிகளை சுற்றி வந்தது.
சிறப்பு ஏற்பாடுகள்
கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது மற்றும் காவல்துறை சார்பில் மாமல்லபுரம் டிஎஸ்பி ஜெகதிஸ்வரன் உத்தரவின் பேரில் திருக்கழுக்குன்றம் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து ஏரளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் ஆங்காங்கே அன்னதானமும் குளிர்பானங்களும் வழங்கப்பட்டது.