சேதமடைந்த வீடுகளில் வசிக்கும் மலைவாழ்மக்கள்

சேதமடைந்த வீடுகளில் வசிக்கும் மலைவாழ்மக்கள்

Update: 2022-05-12 10:46 GMT
திருமூர்த்தி மலை மலைவாழ் குடியிருப்பில் சேதமடைந்த வீடுகளில்  மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள். அந்த வீடுகளைசீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 
மலைவாழ் மக்கள்
மலைவாழ் மக்களின் சுகமான சுமை நிறைந்தது. இயற்கை நிறைந்த பசுமை சூழ்ந்த சோலையில் சுகாதாரம் சுற்றுச்சூழல் நிறைந்த வாழ்க்கை, குயிலின் கீதம், புலியின் உறுமல், யானையின் பிளீறல், வண்டுகளின் ரீங்காரம், பறவைகளின் கூக்குரல், மூலிகை மற்றும் மண் மணம் நிறைந்த காற்று, வெண்ணிற ஓடையாய் தவந்து வரும் நதிகளுக்கிடையில் போராட்டம் நிறைந்த வாழ்க்கை. மேற்கூரையாய் தகரம் வேய்ந்து சுற்றுச்சுவராய் மூங்கில் மற்றும் குச்சிகளைக் கொண்டு எழுப்பப்பட்ட வீட்டில் வசித்து வருகிறார்கள். 
திருமூர்த்திமலை மலைவாழ் குடியிருப்பு வீடுகள் சரிபாதி அளவுக்கு சேதம் அடைந்து உள்ளது.இதனால் நாள்தோறும் அச்சத்துடனே உயிரை கையில் பிடித்துக்கொண்டு வாழும் நிலையில் மலைவாழ் மக்கள் உள்ளனர்.
 இதுகுறித்து அவர்கள் கூறியதாவது
அடிப்படை வசதி 
பாதை வசதி, சுகாதாரம், கல்வி, தகவல் தொடர்பு, குடியிருக்கவீடு என அடிப்படை அத்தியாவசிய தேவைகள் முழுமையாகப் பூர்த்தி அடையாமல் இன்றளவும் எட்டாக்கனியாகவே உள்ளது. வனத்தின் காவலனாக விளங்கும் எங்களுக்கு நிரந்தரமாக வசிப்பதற்கு வீடு அமைத்துத் தரவில்லை. தகரத்தையும் குச்சிகளை கொண்டும் அமைக்கப்பட்ட குடிலில் வாழ்ந்து வருகின்றோம். அதுவும் மழைக்காலங்களில் தண்ணீராலும் கோடை காலத்தில் காற்று மற்றும் கரையானால் சேதம் அடைந்து விடுகிறது. .உயிரை பணயம் வைத்து தேன் எடுத்தல், வடுமாங்காய் பறித்தல் போன்றவற்றுடன் சாகுபடி பணிகளையும் மேற்கொண்டு வருகின்றோம்.இங்கு கட்டப்பட்டுள்ள  110 வீடுகளில் 40 வீடுகள் சுவரில் விரிசல் விட்டு இடிந்து விழும் சூழலில் உள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல் நிலவுவதால் அன்றாட இரவுப் பொழுதை அச்சத்துடனே கழித்து வருகின்றோம். எனவே மாவட்ட நிர்வாகம் திருமூர்த்திமலை உள்ளிட்ட அனைத்து மலைவாழ் குடியிருப்புகளிலும் ஆய்வு செய்து சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் அமைத்துக் கொடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி நாங்கள் விளைவிக்கக்கூடிய மற்றும் வனப்பகுதியில் சேகரிக்கக்கூடிய பொருட்களை நேரடியாக சந்தைப்படுத்தலுக்கு உதவி புரிய வேண்டும்.மேலும் அவசரகால உதவிக்கு ஏதுவாக தகவல்தொடர்பு, பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். 
இவ்வாறு தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்