அனுமந்தராய சாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் கிரானைட் கற்கள் வெட்டி கடத்தல்-அதிகாரிகள் திடீர் ஆய்வு
ராயக்கோட்டை அருகே அனுமந்தராய சாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் கிரானைட் கற்களை வெட்டி கடத்தியது தொடர்பாக நேற்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ராயக்கோட்டை:
கிரானைட் கற்கள் கடத்தல்
ராயக்கோட்டையை அடுத்த நாகமங்கலம் ஊராட்சி நீலகிரி கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அனுமந்தராய சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான 75 சென்ட் நிலம் நாகமங்கலத்தில் உள்ளது. இந்த நிலத்தில் இருந்த கிரானைட் கற்களை தனியார் நிறுவனம் ஒன்று உரிய அனுமதியின்றி வெட்டி கடத்தியது. மேலும் வெட்டிய கற்களை கோவில் பகுதியில் குவித்து வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த கடத்தல் கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வந்ததாக தெரிகிறது. கொரோனா காலம் என்பதால் இதுகுறித்து அதிகாரிகளுக்கு தெரியவரவில்லை. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கிரானைட் கற்கள் வெட்டி கடத்தப்படுவது குறித்து புகார் எழுந்தது. இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் நரசிம்மமூர்த்தி உத்தனப்பள்ளி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதிகாரிகள் ஆய்வு
இந்தநிலையில் ஓசூர் உதவி கலெக்டர் தேன்மொழி தலைமையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் ரங்கசாமி, இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் நரசிம்மமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் கருணாகரன் மற்றும் அதிகாரிகள் குழுவினர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் திடீரென ஆய்வு செய்தனர். அவர்கள் கோவில் நிலத்தை அளந்து பார்த்தபோது, அது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, கிரானைட் கற்கள் வெட்டி கடத்தியது தெரியவந்தது.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், அனுமந்தராய சாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து, அதில் இருந்த கிரானைட் கற்கள் வெட்டி கடத்தப்பட்டுள்ளது ஆய்வில் உறுதியாகி உள்ளது. கடத்தல் தொடர்பாக மாவட்ட கலெக்டருக்கு விவர அறிக்கை அனுப்பி வைக்கப்படும் என்றனர்.