மகாவீரர் சிலை கண்டுபிடிப்பு

காரியாபட்டி அருேக மகாவீரர் சிலை கண்டுபிடிக்கப்பட்டது.

Update: 2022-05-10 19:56 GMT
காரியாபட்டி, 
காரியாபட்டி பெ.புதுப்பட்டியில் தொல்லியல் ஆய்வாளர் ராகவன், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தொல்லியல் பட்டபடிப்பு மாணவர்கள் சரத்ராம், ராஜபாண்டிஆகியோர் மேற்புற கள ஆய்வு மேற்கொண்டனர். 
மகாவீரர் சிலை
அப்போது அதில் 3 அடி உயரமும், 2¼ அடி அகலமும் கொண்ட ஒரு சிலையை கண்டறிந்தனர். இதுகுறித்து ஓய்வு பெற்ற தொல்லியல் துறை துணை இயக்குனரும், பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மைய செயலாளரான சாந்தலிங்கத்திடம் கலந்து ஆலோசித்து இச்சிற்பம் 10-ம் நூற்றாண்டை சேர்ந்த சமண சிற்பம் என உறுதி செய்தனர்.
இதுகுறித்து ஆய்வாளர் கூறுகையில், சமணர் சிலையானது வர்த்தமானர் என்னும் சமணர் சமயத்தின் 24-வது தீர்த்தங்கரான மகாவீரர் சிலையாகும். இச்சிலை தியான நிலையில் அமர்ந்தவாறும், அர்த்த பரியங்க ஆசனத்தில் யோக முத்திரையுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
குலதெய்வம் 
தலையின் பின்புறம் முக்காலத்தையும் உணர்த்தும் ஒளிவீசும் பிரபாவளையமும், பின்புலத்தில் குங்கிலிய மரமும், பக்கவாட்டில் சித்தாக்கிய இயக்கியும், இயக்கனான மாதங்கனும் சாமரம் வீசுவதுபோல் உள்ளது. இச்சமண சிலையை அங்குள்ள மக்கள் சமணர் சாமி என்று அழைத்தும், தங்களின் குலதெய்வமாக எண்ணி வழிபட்டு வந்துள்ளனர். 
அத்துடன் குறிப்பிட்ட நாளில் பொங்கலிட்டும், முடிகாணிக்கை செலுத்தியும், வணங்கி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்