செல்போன் கோபுரம் அமைப்பதாக கூறியதை நம்பி பணத்தை பறிகொடுத்தவரிடம் தொகை ஒப்படைப்பு சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

செல்போன் கோபுரம் அமைப்பதாக கூறியதை நம்பி பணத்தை பறிகொடுத்தவரிடம் தொகை ஒப்படைக்கப்பட்டது.

Update: 2022-05-10 17:27 GMT

விழுப்புரம், 

வானூர் தாலுகா கொடூர் கிராமத்தை சேர்ந்த அய்யாத்துரை மகன் பாலசுப்பிரமணியனின் செல்போனுக்கு கடந்த மாதம் 16-ந் தேதியன்று குறுஞ்செய்தி வந்தது. அதில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்க நிலம் தேவை என்று இருந்ததை பார்த்து அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினார். 

அப்போது எதிர்முனையில் பேசிய நபர், பாலசுப்பிரமணியனிடம் செல்போன் கோபுரம் அமைக்க முன்பணம் ரூ.20 லட்சமும், மாத வாடகை ரூ.25 ஆயிரம் தருவதாகவும் ஆசைவார்த்தை கூறினார்.

 இதை நம்பிய பாலசுப்ரமணியன், அந்த நபர் கூறியபடி வங்கி கணக்கிற்கு கூகுள்பே மூலம் ரூ.1,14,999-ஐ காப்பீடு மற்றும்  இப்பணியை செயல் படுத்துவதற்கான கட்டணமாக அனுப்பி வைத்தார். 


மேலும் பணம் கட்ட சொன்னதால் தன்னிடம் பணம் இல்லையென்றும், தான் இதுவரை செலுத்திய பணத்தை திருப்பி கேட்டபோது தராமல் ஏமாற்றி விட்டார். இதுகுறித்து பாலசுப்பிரமணியன், விழுப்புரம் சைபர் கிரைம் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

 இவ்வழக்கின் மேல் நடவடிக்கையாக அந்த மர்ம நபரின் வங்கி கணக்கை முடக்கம் செய்து ரூ.1,14,999-ஐ மீட்டு பாலசுப்பிரமணியனின் வங்கி கணக்கிற்கு வரவு வைக்க சம்பந்தப்பட்ட வங்கி கிளை அதிகாரிகள் மூலம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தராஜ், சப்- இன்ஸ்பெக்டர்கள் ரவிசங்கர், அசாருதீன் மற்றும் ராஜசேகர் ஆகியோர் நடவடிக்கை மேற்கொண்டு பாலசுப்பிரமணியனிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்