மைலாப்பூர் முள்ளிக்கண்மாயில் மீன்பிடி திருவிழா

மைலாப்பூர் முள்ளிக்கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

Update: 2022-05-10 17:04 GMT
பொன்னமராவதி:
மீன்பிடி திருவிழா
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே மைலாப்பூர் இரட்டை கண்மாயான முள்ளிக்கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. மீன்பிடி திருவிழாவை முன்னிட்டு சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான கிராமமக்கள் கலந்து கொண்டனர். அப்போது ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோர் கண்மாய்க் கரையின் மடை முன்பு தேங்காய் உடைத்து சூடம் காண்பித்து வழிபட்டனர். பின்னர் வெள்ளை துண்டு வீசினர். 
மீன்களை பிடித்து சென்றனர்
இதனைத்தொடர்ந்து பொன்னமராவதி ஒன்றியத்தில் உள்ள மைலாப்பூர், அஞ்சுபுளிபட்டி, ஆரணிப்பட்டி, ஏனாதி, பிடாரம்பட்டி, நெடுவயல், கட்டையாண்டிபட்டி, கேசராபட்டி, உலகம்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த கிராமமக்கள் ஒன்றிணைந்து கண்மாயில் இறங்கி உற்சாகமாக மீன் பிடிக்க தொடங்கினர். 
இதில் ஊத்தா, தூரி, கச்சா, வலை உள்ளிட்டவைகளை பயன்படுத்தி நாட்டுவகை மீன்களான ஜிலேபி, விரால், கெண்டை, அயிரை, கெளுத்தி உள்ளிட்ட மீன்களை பொதுமக்கள் பிடித்தனர். பின்னர் அவைகளை வீட்டிற்கு எடுத்துச்சென்று சமைத்து சாப்பிட்டனர். 

மேலும் செய்திகள்