திண்டிவனம் அருகே பரபரப்பு இருளர் இன சிறுவனை தீயில் தள்ளிவிட்ட மாணவர்கள் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

திண்டிவனம் அருகே இருளர் இன சிறுவனை அவனுடன் பள்ளியில் படிக்கும் சக மாணவர்கள் தீயில் தள்ளிவிட்டனர். இதில் படுகாயமடைந்த சிறுவனுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2022-05-10 16:55 GMT

திண்டிவனம், 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள காட்டுசிவிரி அண்ணா நகரை சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது 39). இவர் இருளர் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர் ஆவார். 

இவரது மகன் சுந்தரராஜன் (11). இவன் காட்டுசிவிரி அரசு உயர்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். சுந்தரராஜனை, அவனுடன் படிக்கும் சகமாணவர்களில் சிலர், சாதி பெயரை கூறி அழைத்து வந்தனர். இதனால் மாணவர்களிடையே தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

தீயில் தள்ளிவிட்ட மாணவர்கள் 

இந்த நிலையில் காட்டுசிவிரியில் உள்ள கருமகாரிய கொட்டகை அருகே நேற்று குப்பைகள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக நடந்து சென்ற சுந்தரராஜனை, 3 மாணவர்கள் திடீரென தீயில் தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதில் அவனது உடலில் தீப்பிடித்து எரிந்தது. வலியால் அலறி துடித்த சிறுவன், அருகில் தேங்கி கிடந்த தண்ணீரில் படுத்து, உருண்டு தீயை அணைத்துள்ளான். 

பின்னர், உடலில் ஏற்பட்ட தீக்காயங்களை தாங்கிக் கொண்டு, வீட்டுக்கு ஓடி சென்று தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெற்றோரிடம் கூறி அழுதான்.  இதைகேட்டு பதறிப்போன, கன்னியப்பன் உடனடியாக தனது மகனை சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவனுக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். 

போலீசார் விசாரணை 

இதுபற்றி அறிந்ததும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சேரன் நேரில் சென்று பார்வையிட்டு சுந்தரராஜன், அவனது தந்தை கன்னியப்பன் ஆகியோருக்கு ஆறுதல் கூறினார். 

அப்போது மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளர் வக்கீல் எழில்மாறன், வக்கீல் பூபால், இமயன், காமராஜ், அருள் ஆகியோர் உடனிருந்தனர். இதேபோல் பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரபாகல்விமணியும் ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். 

 
இதுகுறித்து புகாரின் பேரில் வெள்ளிமேடுபேட்டை போலீசார் வன்கொடுமை சட்டத்தின் கீழ் 3 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சப்-கலெக்டர் விசாரணை

இதற்கிடையே சம்பவம் பற்றி அறிந்த,  திண்டிவனம் சப்-கலெக்டர் அமித் ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று, சுந்தர்ராஜனுக்கு ஆறுதல் கூறி, நடந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டார். அப்போது அவருடன், திண்டிவனம் தாசில்தார் வசந்த கிருஷ்ணன் உடனிருந்தார்.

மேலும் செய்திகள்