தலையில் கல்லைப்போட்டு வாலிபர் கொலை; மர்மநபர்களுக்கு வலைவீச்சு

தார்வார் அருகே தலையில் கல்லைப்போட்டு வாலிபரை கொன்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்

Update: 2022-05-10 16:34 GMT
உப்பள்ளி: தார்வார் அருகே தலையில் கல்லைப்போட்டு வாலிபரை கொன்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். 
 
வாலிபர் படுகொலை

தார்வார் தாலுகா அம்மினபாவி கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ்(வயது 35). தொழிலாளியான இவர், நேற்று மாலை வேலை முடிந்து வீட்டுக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை மோட்டார் சைக்கிளில் மர்மநபர்கள் 3 பேர் பின்தொடர்ந்து வந்துள்ளனர். கவலக்கேரி கிராமம் அருகே ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து பிரகாசின் மோட்டார் சைக்கிளை, மர்மநபர்கள் 3 பேரும் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளால் வழிமறித்துள்ளனர். 

இதையடுத்து 3 பேரும் கீழே இறங்கி வந்து பிரகாசுடன் தகராறு செய்து கீழே தள்ளிவிட்டுள்ளனர். பின்னர் பிரகாசின் தலையில் பெரிய கல்லைப்போட்டு கொலை செய்துள்ளனர். இதையடுத்து 3 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர்.  
 
மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இதையறிந்த அப்பகுதி மக்கள், தார்வார் புறநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் சம்பவம் அறிந்து தார்வார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண்காந்த் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். 

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் முன்விரோதத்தில் பிரகாசை, மர்மநபர்கள் கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தார்வார் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்