தொழிலாளியை கடித்து குதறிய கரடி
களக்காடு அருகே தொழிலாளியை கரடி கடித்து குதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம், பாண்டியாபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 44). விவசாய கூலி தொழிலாளி. இவர் நேற்று அதிகாலை ஊருக்கு அருகே அதலி சாஸ்தா கோவில் சாலையில் உள்ள வாழை தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வாழை தோட்டத்துக்குள் கரடி ஒன்று பதுங்கியிருந்து வாழைத்தார்களை தின்று கொண்டிருந்தது. திடீரென அந்த கரடி மோட்டார் சைக்கிளில் சென்ற சக்திவேல் மீது பாய்ந்தது. இதில் அவர் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். அவரை கரடி கடித்துக் குதறியது. வலியால் அவர் அலறி துடித்தார்.
அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து தோட்டங்களில் வேலை செய்த தொழிலாளர்கள் ஓடி வந்து கரடியை விரட்டினர். இதனால் கரடி அங்கிருந்து ஓடி விட்டது. கரடி கடித்துக்குதறியதில் படுகாயம் அடைந்த சக்திவேலை அவர்கள் மீட்டு களக்காடு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். சக்திவேலின் கையில் கரடியின் 6 பற்கள் பதிந்து இருந்ததும், அவருக்கு 19 தையல் போட்டு இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கரடி உள்ளிட்ட வனவிலங்குகளின் அட்டகாசத்தை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘இப்பகுதியில் சிறுத்தை, கரடி, யானை, கடமான்கள் உள்ளிட்ட விலங்குகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதுகுறித்து வனத்துறையிடமும், கலெக்டரிடமும் பலமுறை மனுக்கள் கொடுத்து முறையிட்டும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் தற்போது தொழிலாளி கரடியால் தாக்கப்பட்டு உள்ளார். களக்காடு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் எல்லையோரங்களில் மின்வேலி அமைக்கப்பட்டு உள்ளது. அவை சரியான பராமரிப்பு இன்றி காணப்படுவதால், இரவு நேரங்களில் வனவிலங்குகள் மலையடிவார பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன. மேலும், விவசாய பணிகளுக்கு செல்லும் விவசாயிகளையும் தாக்குகின்றன. எனவே, வனத்துறையினர் இரவு நேரங்களில் வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்டறிந்து அவற்றை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.