நடு ரோட்டில் மழை நீர் சேகரிப்போ

நடு ரோட்டில் மழை நீர் சேகரிப்போ

Update: 2022-05-10 15:47 GMT
திருப்பூர் மாநகர பகுதியில் ஆங்காங்கே ரோடுகள் சேதமடைந்த நிலையில் உள்ளன. இதேபோல் ஸ்மார்ட் சிட்டி பணி நடந்து வரும் இடங்களிலும் ரோடுகள் குண்டும், குழியுமாக உள்ளன. இதன்காரணமாக இதுபோன்ற ரோடுகளில் வாகனங்களை ஓட்டி செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் தற்போது திருப்பூரில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ரோடுகளில் உள்ள குழிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அந்த வகையில் வளர்மதி பாலத்தில் இருந்து செல்லாண்டியம்மன் துறைக்கு செல்லும் வழியில் உள்ள முத்துசாமி செட்டியார் வீதியில் பெரிய குழிகள் உள்ளன. இதனால் இந்த ரோட்டில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்பதால் இந்த வழியாக இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி நான்கு சக்கர வாகனங்கள் செல்வதற்கும் சிரமமான நிலை உள்ளது. 
இதனால் வாகன ஓட்டிகள் இங்கு தட்டுத்தடுமாறியபடி வாகனங்களை ஓட்டி செல்கின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் சற்று நிலை தடுமாறினாலும் ரோட்டில் உள்ள சேறு, சகதியில் விழுந்து எழ வேண்டிய அவல நிலை உள்ளது. ரோட்டில் மழை நீர் சேகரிப்பு பணி நடக்கிறதா? என இப்பகுதி மக்கள் ஆதங்கம் கொள்கின்றனர். இங்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலை அமைப்பதற்கான பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால்தான் இந்த ரோடு நீண்ட காலமாக சீரமைக்கப்படாமல் உள்ளது. எனவே வாகன ஓட்டிகளை தள்ளாட வைக்கும் இந்த ரோட்டை விரைவில் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் செய்திகள்