திருவள்ளூரில் ரூ.165 கோடியில் புதிய மருத்துவ கல்லூரி கட்டிட பணி தீவிரம்; தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு
திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு மருத்துவ கல்லூரி புதிதாக கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. தற்போது இங்கு மருத்துவ வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
அதே சமயம் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு ரூ.165 கோடியில் 7 மாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. பணிகள் விரைவில் முடிவடையும் நிலையில் உள்ளது.
இங்கு நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை தலைமை செயலாளர் இறையன்பு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி டீன் அரசி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஜெயக்குமார், பொதுப்பணித்துறை செயல் பொறியாளர் (மருத்துவ பணிகள்) நாராயண மூர்த்தி, உதவி செயல் பொறியாளர் சோமசுந்தரம், ரேவதி மனோகரன், கட்டுமான நிறுவன தலைவர் தென்னரசு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.