கோத்தகிரி பகுதியில் கேரட் விளைச்சல் அதிகரிப்பு
கோத்தகிரி பகுதியில் கேரட் விளைச்சல் அதிகரித்து உள்ளது. ஆனால் கொள்முதல் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளார்கள்.
கோத்தகிரி
கோத்தகிரி பகுதியில் கேரட் விளைச்சல் அதிகரித்து உள்ளது. ஆனால் கொள்முதல் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளார்கள்.
விளை நிலங்களில் காய்கறிகள்
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஏராளமான விவசாயிகள் காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர்.கோத்தகிரி பகுதியில் டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்பதால் தங்களுடைய நிலங்களை விவசாயம் செய்யாமல் தரிசாக வைத்திருந்த விவசாயிகள், கடந்த பிப்ரவரி மாதம் முதல் தங்கள் விளை நிலங்களில் காய்கறிகளை மீண்டும் பயிரிடத் தொடங்கினர்.
கால்வாய் அமைப்பு
இந்தநிலையில் கோத்தகிரி பகுதியில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது பலத்த மழை பெய்து வந்ததால், விவசாயிகள் பயிர்களுக்கு ஸ்பிரிங்ளர் மூலம் தண்ணீர் பாய்ச்ச வேண்டிய தேவை ஏற்படவில்லை. மேலும் போதுமான மழை பெய்ததன் காரணமாக காய்கறி பயிரிட்டுள்ள தோட்டங்களில், பயிர்கள் செழித்து வளர்ந்ததுடன், பயிர்களுக்கிடையே அதிக அளவுகளைச் செடிகளும் வளர்ந்தன. இதனால் அறுவடைக்கு தயாராகி வரும் காய்கறிகளின் சாகுபடி பாதிக்கப்படும் என்பதால் விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் வளர்ந்துள்ள களைச் செடிகளை கையால் பிடுங்கி அகற்றினர். மேலும் விளை நிலங்களில் தண்ணீர் தேங்கினால் அறுவடைக்கு தயாராகி உள்ள கேரட் பயிர்கள் அழுகி விடும் என்பதால், தோட்டங்களின் நடுவே தண்ணீர் தேங்காமல் இருக்க மழைநீர் வழிந்தோடும் வகையில் கால்வாய்கள் அமைத்தனர்.
விலை வீழ்ச்சி
இந்த நிலையில் தோட்டங்களில் பயிரிட்டுள்ள கேரட் பயிர்கள் செழித்து வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. ஆனால் தற்போது கேரட் கொள்முதல் விலை குறைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மேலும், கொள்முதல் விலை உயரும் என்ற நம்பிக்கையில் அறுவடையை தாமதித்து வருகின்றனர். இதுகுறித்து புது கோத்தகிரியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், கடந்த பிப்ரவரி மாதம் தோட்டங்களில் கேரட் பயிரிட்டோம். அப்போது வறட்சியான சீதோஷ்ண நிலை நிலவியதால் ஸ்பிரிங்ளர் மூலம் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சி பராமரித்து வந்தோம். தற்போது போதுமான மழை பெய்ததால் பயிர்கள் செழித்து வளர்ந்துள்ளன. இன்னும் சில தினங்களில் கேரட் பயிர்கள் அறுவடைக்கு தயாராகி விடும். ஆனால் தற்போது மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் கேரட் கிலோ ஒன்றுக்கு 25 ரூபாய் முதல் 30 ரூபாய்க்கு தரத்திற்கு தக்கவாறு கொள்முதல் செய்யபட்டு வருகிறது. இந்த கொள்முதல் விலை போதுமானதாக இல்லை. எனவே விலை உயரக்கூடும் என்கிற நம்பிக்கையில் அறுவடையை தற்காலிகமாக தாமதம் செய்து வருகிறோம். என்றார்.