தேனி மாவட்டத்தில் 14,582 மாணவ, மாணவிகள் பிளஸ்-1 தேர்வு எழுதினர் 911 பேர் தேர்வு எழுத வரவில்லை
தேனி மாவட்டத்தில் பிளஸ்-1 அரசு பொதுத்தேர்வை 14 ஆயிரத்து 582 மாணவ, மாணவிகள் எழுதினர். 911 பேர் தேர்வு எழுத வரவில்லை.
தேனி:
பிளஸ்-1 தேர்வு
தமிழகம் முழுவதும் பிளஸ்-1 அரசு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. தேனி மாவட்டத்தில் 142 பள்ளிகளை சேர்ந்த 7 ஆயிரத்து 994 மாணவர்கள், 7 ஆயிரத்து 499 மாணவிகள் என மொத்தம் 15 ஆயிரத்து 493 பேர் தேர்வு எழுத அனுமதி பெற்று இருந்தனர். அவர்களில் 7 ஆயிரத்து 468 மாணவர்கள், 7 ஆயிரத்து 114 மாணவிகள் என மொத்தம் 14 ஆயிரத்து 582 பேர் தேர்வு எழுதினர்.
கல்வி மாவட்டம் வாரியாக தேனியில் 5 ஆயிரத்து 781 மாணவ, மாணவிகள், பெரியகுளத்தில் 3 ஆயிரத்து 913 மாணவ, மாணவிகள், உத்தமபாளையத்தில் 4 ஆயிரத்து 888 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். மொத்தம் 53 மையங்களில் தேர்வு நடந்தது.
911 பேர் எழுதவில்லை
மாவட்டத்தில் இந்த தேர்வை எழுத அனுமதி பெற்றிருந்தவர்களில் 911 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை. அதுபோல் தனித்தேர்வர்கள் தேர்வு எழுத 3 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. அதில் தேர்வு எழுத 221 பேர் அனுமதி பெற்றிருந்தனர். அவர்களில் 198 பேர் தேர்வு எழுதினர்.
இந்த தேர்வுக்காக தேர்வு மையங்களுக்கு மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் வந்தனர். அவர்கள் தேர்வு மைய வளாகத்தில் அமர்ந்து கடைசி நேர படிப்பில் தீவிரம் காட்டினர். 10 மணியளவில் தேர்வு தொடங்கி அமைதியான முறையில் நடந்தது. மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் தேர்வு எழுதினர். தேர்வு மையங்களில் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். கல்வித்துறை அதிகாரிகளும் தேர்வு மையங்களில் ஆய்வு செய்து தேர்வு நடைமுறைகளை பார்வையிட்டனர்.
கலெக்டர் ஆய்வு
இதனிடையே பெரியகுளம் வி.நி.அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் உள்ள பிளஸ்-1 தேர்வு மையத்தில் மாவட்ட கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்தார். தேர்வு மையத்தில் குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.