கடலில் 13 மணி நேரம் நீந்தி தூத்துக்குடி வாலிபர் சாதனை
தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் வரை கடலில் 13 மணி நேரம் நீந்தி வாலிபர் சாதனை நிகழ்த்தியுள்ளார்.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி பிரையன்ட் நகரை சேர்ந்த முத்துசாமி மகன் கார்த்திகேயன் (வயது 31), நீச்சல் பயிற்சியாளர். இவர் கொரோனா விழிப்புணர்வு, கடல் வாழ் உயிரினங்கள் பாதுகாப்பு மற்றும் உடற்பயிற்சியின் அவசியம் ஆகியவற்றை வலியுறுத்தி தூத்துக்குடி துறைமுக கடல் பகுதியில் இருந்து நீச்சலை தொடங்கினார். இந்த நிகழ்ச்சியை தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ், சப்-இன்ஸ்பெக்டர் ரென்னிஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் கடற்கரை வரை 42 கி.மீ. தூரத்தை 13 மணி நேரம் 15 நிமிடங்களில் கடந்து வந்து சாதனை படைத்துள்ளார்.
திருச்செந்தூர் கோவில் கடற்கரை வரை நீச்சலடித்து வந்த கார்த்திகேயனை திருச்செந்தூர் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோமதிநாயகம் மற்றும் திருச்செந்தூர் ஜீவா நகர் பகுதி மீனவர்கள் உள்ளிட்டவர்கள் மேளதாளம் முழங்க, மகுடம் சூட்டி, மாலை அணிவித்து வரவேற்றனர்.