சொத்து வரி உயர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்; ஈரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஜி.கே.வாசன் பேச்சு
சொத்து வரி உயர்வை தமிழக அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், ஈரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசினார்.
ஈரோடு
சொத்து வரி உயர்வை தமிழக அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், ஈரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசினார்.
த.மா.கா. ஆர்ப்பாட்டம்
தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்வு செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதன்படி சொத்து வரி உயர்வுக்கு எதிராக தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழகத்தில் மண்டலம் வாரியாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.
5-வது மண்டலமாக நேற்று மேற்கு மண்டல மாவட்டங்கள் சார்பில் ஈரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார். அவர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
துரோகம்
அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார்கள். அதை நம்பி வாக்களித்த மக்களுக்கு தி.மு.க. துரோகம் இழைத்து வருகிறது. ஆட்சிக்கு வந்த தி.மு.க. வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்று காத்திருந்த மக்களுக்கு சொத்து வரி உயர்வு என்ற சுமையை அரசு வழங்கி இருக்கிறது. கொரோனா பாதிப்பில் மக்கள் மீண்டு வரும் முன்பே இப்படிப்பட்ட சுமையை கொடுத்து இருக்கிறது அரசு. ஏன் மக்களை பற்றி தி.மு.க. கொஞ்சம் கூட கவலைப்படாமல் ஏழை எளியவர்கள் மீது இரக்கம் இன்றி 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை வரியை உயர்த்தி உள்ளது.
ரத்து செய்ய வேண்டும்
எதற்கு எடுத்தாலும் மத்திய அரசை காரணம் காட்டுவது தி.மு.க.வுக்கு வழக்கமாகி வருகிறது. மத்திய அரசு வரியை உயர்த்த கூறினால்கூட, தமிழக மக்கள் மீது இரக்கம் இருந்தால் தமிழக அரசு வரியை உயர்த்தி இருக்கக்கூடாது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொத்து வரி உயர்த்தப்படாது என்று கூறப்பட்டு உள்ளது. ஒரு ஆண்டினை தி.மு.க. அரசு நிறைவு செய்து உள்ளது. இது ஒரு ஆண்டு வேதனைகளின் சாதனைதான். மக்கள் தி.மு.க. மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.
எனவே தி.மு.க. அரசு சொத்து வரி உயர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும். வரி உயர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
இதுபோல் படிப்படியாக மதுக்கடைகளை மூட வேண்டும். சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது. மின்வெட்டால் தேர்வுக்கு படிக்கும் மாணவ-மாணவிகள் பாதிக்கப்படுகிறார்கள். தொழில்கள் பாதிக்கப்படுகின்றன. நூல் விலைஉயர்வால் விசைத்தறி தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது. கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் செய்பவர்களுக்கு தூக்குத்தண்டனை கொடுத்தாலும் த.மா.கா. ஆதரிக்கும். த.மா.கா. மக்களின் நன்மைக்காக போராடும் இயக்கம். மக்கள் நமக்கு உரிய இடத்தை தருவார்கள்.
இவ்வாறு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பேசினார்.
கோஷம்
ஆர்ப்பாட்டத்தில் சொத்து வரி உயர்வை திரும்ப பெறுவது உள்பட பல்வேறு கோரிக்கைகள் கோஷங்களாக எழுப்பப்பட்டன.
இதில், மாநில இளைஞர் அணி தலைவர் எம்.யுவராஜா, கட்சியின் மாநில துணைத்தலைவர் ஆர்.ஆறுமுகம், மாநில பொதுச்செயலாளர் விடியல் எஸ்.சேகர், மூத்த நிர்வாகிகள் எஸ்.டி.சந்திரசேகர், சி.எஸ்.கவுதமன் மற்றும் ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி, நாமக்கல், சேலம் மாவட்டங்களை சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக ஈரோடு மத்திய மாவட்ட தலைவர் பி.விஜயகுமார் வரவேற்றார். தெற்கு மாவட்ட தலைவர் வி.பி.சண்முகம், வடக்கு மாவட்ட தலைவர் சக்திவேல் ஆகியோர் நன்றி கூறினார்கள்.