மோட்டார் சைக்கிள்கள் தொடர் திருட்டு: சேலம் அரசு ஆஸ்பத்திரியில் போலீஸ் துணை கமிஷனர் ஆய்வு
மோட்டார் சைக்கிள்கள் தொடர் திருட்டு சம்பவம் தொடர்பாக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் போலீஸ் துணை கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார்.
சேலம்,
துணை கமிஷனர் ஆய்வு
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களை பார்ப்பதற்காக அவர்களது உறவினர்கள் ஆஸ்பத்திரி வளாகம் முழுவதும் ஆங்காங்கே மொபட் மற்றும் மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதை பயன்படுத்தி மர்ம நபர்கள், மோட்டார் சைக்கிள்களை திருடி செல்லும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் 12 வாகனங்கள் திருடப்பட்டதாக ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தொடர் திருட்டை கட்டுப்படுத்தவும், வாகன திருட்டில் ஈடுபடும் நபர்களை கண்டுபிடிக்கும் வகையிலும் போலீஸ் துணை கமிஷனர் மோகன்ராஜ் நேற்று சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்தார். அப்போது, ஆஸ்பத்திரியில் 135 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தாலும், அவற்றில் பாதிக்கு மேல் செயல்படாமல் இருப்பது தெரியவந்தது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பொருத்தப்பட்ட கேமரா என்பதால் அதன் பதிவுகளும் தெளிவாக இல்லை.
டூவீலர் பார்க்கிங்
இந்த கேமராக்கள் அனைத்தும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்வதால் டூவீலர் பார்க்கிங் வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆஸ்பத்திரி டாக்டர்கள் மணிமாலா, சிவரஞ்சினி ஆகியோரிடம் துணை கமிஷனர் மோகன்ராஜ் கேட்டுக்கொண்டார். மேலும், அவர், ஆஸ்பத்திரியின் வெளிப்புறத்தில் நிறுத்தப்படும் வாகனங்களையும் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.