கோவில் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி மனு

கோவில் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளிக்கப்பட்டது.

Update: 2022-05-09 21:33 GMT

தாமரைக்குளம்:

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 280 மனுக்கள் பெறப்பட்டன‌.

இதில் கோவில் நிலங்களை குத்தகைக்கு எடுத்தவர்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், செந்துறை பகுதியில் உள்ள சிவதாண்டேஸ்வரர் கோவில் மற்றும் வரதராஜ பெருமாள் ேகாவில் ஆகிய கோவில்களுக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை சிலர் கிரைய பத்திரம் செய்துள்ளனர். அந்த நிலத்தை அந்த கிராமத்தில் உள்ளவர்கள் குத்தகைக்கு எடுத்து பயிர்கள் சாகுபடி செய்து வந்தனர். இந்நிலையில் கோவில் நிலங்களை பட்டா மாற்றம் செய்தவர்கள், நிலங்களில் இருந்த 150-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களையும், 50-க்கும் மேற்பட்ட பனை மரங்களையும் வெட்டி சாய்த்துவிட்டனர். மேலும் 300 ஆண்டு காலமாக இருந்த வேலிகளையும் அடியோடு அடையாளம் தெரியாமல் அழித்துவிட்டனர். எனவே கோவில் சொத்துக்களையும், கோவில் நிலங்களையும் மீட்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலங்களை குத்தகை செய்தவர்களுக்கு வழங்க வேண்டும், என்று கூறியுள்ளனர்.

டாஸ்மாக் கடையால் இடையூறு

உடையார்பாளையம் வட்டம் உடையவர் தீயனூர் கிராம மக்கள் அளித்த மனுவில், அம்பாபூர் ஊராட்சியில் உடையவர் தீயனூர் உள்பட 11 கிராமங்களும், சுமார் 5,500 வாக்காளர்களும் உள்ளனர். மிகப்பெரிய ஊராட்சியாக உள்ளதால் 11 கிராமங்களுக்கும் சாலை வசதி, கழிவுநீர் வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அரசின் அடிப்படை திட்டங்கள், வசதிகள் பொதுமக்களுக்கு கிடைப்பதில்லை. எனவே அம்பாபூர் ஊராட்சியை இரண்டாக பிரித்து புதிதாக உடையவர் தீயனூரை ஊராட்சியாக உருவாக்கி பொதுமக்களுக்கு அனைத்து சலுகைகளும், வசதிகளும் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும், என்று கூறியுள்ளனர்.

அரியலூர் பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையால் சிந்தாமணி தெரு, கீழத்தெரு பொதுமக்கள் மிகவும் பாதிப்படைகின்றனர். மது அருந்துபவர்களால் போக்குவரத்துக்கு பெரிதும் இடையூறாக உள்ளது. வாகனங்கள் சாலையில் நிறுத்தப்படுகின்றன. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் அந்த வழியாக வாரச்சந்தைக்கு வரும் பொதுமக்கள், குடிமகன்களால் பல்வேறு தொல்லைக்கு உள்ளாகின்றனர். எனவே பொதுமக்களுக்கும், பள்ளி செல்லும் மாணவர்களுக்கும், பஸ் போக்குவரத்திற்கும் இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்றக்கோரி மகளிர் சுய உதவிக்குழுவினர் மனு அளித்துள்ளனர்.

துர்நாற்றம்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட துணை செயலாளர் தண்டபாணி அளித்த மனுவில், அரியலூரில் உள்ள வாரச்சந்தை, ஜெயங்கொண்டம் சாலை, பிள்ளையார் கோவில் தெரு மற்றும் கீழத்தெருவில் அமைக்கப்பட்டுள்ள வடிகால் வாய்க்கால் முழுமையாக, முறையாக கட்டப்படாமல் உள்ளதால், வாய்க்காலில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதியில் குடியிருப்போர் அவதிப்படுகின்றனர். துர்நாற்றம் கடுமையாக உள்ளதால் சுகாதாரக்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே வாய்க்காலை முறையாக அமைப்பதை ஆய்வு செய்ய வேண்டும். மூடப்படாமல் உள்ள பகுதிகளை மூடி துர்நாற்றம் ஏற்படுவதை தடுக்க வேண்டும், என்று கூறியுள்ளார்.

செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தை சேர்ந்த நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவின் அண்ணனான மணிரத்னம் அளித்த மனுவில், குழுமூரில் இயங்கி வரும் மரு.அனிதா நினைவு நூலகத்தை குழந்தைகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் என அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். முறையான சாலை வசதியில்லாததால் மழைக்காலங்களில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. இரவில் விஷப்பூச்சிகளின் அச்சுறுத்தலும் உள்ளது. ஆகவே அப்பகுதியில் உடனடியாக சாலை மற்றும் மின் விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும், என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்