மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்: மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2¼ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் கார்மேகம் வழங்கினார்

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2¼ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.

Update: 2022-05-09 20:33 GMT
சேலம், 
குறைதீர்க்கும் கூட்டம்
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்திருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை அதிகாரிகளிடம் அளித்தனர். அந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை தீர்வுகாணுமாறு கலெக்டர் கார்மேகம் அறிவுறுத்தினார்.
நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக்கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 439 மனுக்கள் பெறப்பட்டன.
நலத்திட்ட உதவிகள்
குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்திருந்த மாற்றுத்திறனாளிடம் கலெக்டர் கார்மேகம் குறைகளை கேட்டு அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது, மாற்றுத்திறனாளிகள் வழங்கிய 10 மனுக்களைப் பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சிறப்பு பள்ளிகளில் படிக்கும் மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு கற்பிக்க பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மென்பொருளுடன் கூடிய தலா ரூ.24,240 மதிப்பில் கையடக்க கணினிகளை 8 சிறப்பு பள்ளி தாளாளர்களுக்கு கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.
மேலும் ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.8,500 மதிப்பிலான சக்கர நாற்காலியும், 2 பேருக்கு தலா ரூ.12,500 மதிப்பிலான கைபேசிகளும் என மொத்தம் ரூ.2 லட்சத்து 27 ஆயிரம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டம் தனித்துணை ஆட்சியர் சத்திய பாலகங்காதரன், தனித்துணை ஆட்சியர் (முத்திரைத்தாள்) கோவிந்தன், உதவி ஆணையர் (கலால்) தனலிங்கம், மாவட்ட வழங்கல் அலுவலர் அமுதன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்