வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை விரைந்து முடிக்க கோரி இந்து முன்னணியினர் உண்ணாவிரதம் இருக்க முயற்சி
வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை விரைந்து முடிக்க கோரி இந்து முன்னணியினர் உண்ணாவிரதம் இருக்க முயன்றனர்.
நெல்லை:
வெள்ளநீர் கால்வாய்
நெல்லை-தூத்துக்குடி மாவட்ட இந்து முன்னணியினர் மாநில பொதுச் செயலாளர் அரசுராஜா தலைமையில் நேற்று பாளையங்கோட்டை பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்க முயன்றனர்.
தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் திட்டமான தாமிரபரணி ஆற்றுடன் கருமேனியாறு- நம்பியாறு இணைப்பு திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்க முயன்றனர்.
இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார், மாநில செயலாளர் கா.குற்றாலநாதன், நெல்லை கோட்ட தலைவர் தங்கமனோகர், கோட்ட செயலாளர் சக்திவேல், நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சிவா, பொதுச்செயலாளர் பிரம்மநாயகம் மற்றும் ராதாபுரம், வள்ளியூர், நாங்குநேரி, கல்லிடைக்குறிச்சி பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகளும், இந்து முன்னணி நிர்வாகிகளும் உண்ணாவிரதத்தில் பங்கேற்க திரண்டனர்.
பேச்சுவார்த்தை
இதைத்தொடர்ந்து இந்து முன்னணி நிர்வாகிகள், விவசாயிகளிடம், நீர்வள ஆதார செயற்பொறியாளர்கள் பழனிவேல், திருமலைக்குமார், திட்ட மேலாளர் அண்ணாதுரை, மாநகர உதவி போலீஸ் கமிஷனர் விவேகானந்தன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் வருகிற செப்டம்பர் மாதத்திற்குள் இந்த திட்ட பணிகளை விரைந்து முடிப்பதாக செயற்பொறியாளர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.