தக்கலை அருகே பெண் அதிகாரியிடம் நகை பறித்த கொள்ளையன் விபத்தில் பலி

தக்கலை அருகே பெண் அதிகாரியிடம் நகை பறித்துவிட்டு தப்பி சென்ற கொள்ளையன் விபத்தில் பலியானான். அவருடன் சென்றவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2022-05-09 18:26 GMT
தக்கலை, 
தக்கலை அருகே பெண் அதிகாரியிடம் நகை பறித்துவிட்டு தப்பி சென்ற கொள்ளையன் விபத்தில் பலியானான். அவருடன் சென்றவர் படுகாயம் அடைந்தார்.
பெண் அதிகாரி
அருமனை அருகே உள்ள பிலாங்காலவிளையை சேர்ந்தவர் அஸ்திகான் ஜோஸ்லின். இவரது மனைவி நட்சத்திர பிரேமிகா (வயது35). முன்சிறை ஊராட்சி ஒன்றியத்தில் உதவி என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவர் சம்பவத்தன்று காலையில் ஸ்கூட்டரில் தக்கலை அருகே உள்ள சாமிவிளை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் நட்சத்திர பிரேமிகாவின் கழுத்தில் கிடந்த 11 பவுன் தங்க சங்கிலிைய பறித்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தக்கலை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். 
கேரளாவுக்கு தப்பி சென்றனர்
அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளையர்கள் மேக்காமண்டபம், சாமியார்மடம், மார்த்தாண்டம் வழியாக களியக்காவிளை சோதனை சாவடியை கடந்து கேரளாவுக்கு தப்பி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து தக்கலை சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்தநிலையில் தப்பியோடிய வாலிபர்கள் திருவனந்தபுரம் அருகே உள்ள பாலராமபுரம், நடுவாமூடு பள்ளிக்கல் பகுதியில் சென்ற போது மோட்டார் சைக்கிள் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை பொதுமக்கள் மீட்டு திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
பரிதாப சாவு
ஆனால், செல்லும் வழியில் ஒருவர் உயிரிழந்தார். இன்னொரு வாலிபர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவரிடம் கேரள போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவர் திருவனந்தபுரம் கடினங்குளம் பகுதியை சேர்ந்த சஜாதுகான் (27) என்பதும், படுகாயம் அடைந்தவர் கோட்டயம் பாலா பகுதியை சேர்ந்த அமல் (24) என்பதும் தெரிய வந்தது.
இவர்கள் தக்கலை அருகே நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுவிட்டு தப்பி செல்லும் போது விபத்தில் சிக்கியதும் தெரிய வந்தது.
நகை மீட்பு
இதுகுறித்து கேரள போலீசார், தக்கலை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே தனிப்படை போலீசார் கேரளாவுக்கு சென்று சிகிச்சையில் இருந்த வாலிபரிடம் இருந்து 11 பவுன் நகையை மீட்டனர்.
மேலும், போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் இவர்கள் குமரி மாவட்டத்தில் பல இடங்களில் நடந்த வழிப்பறி, நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. 
சிகிச்சை பெறும் வாலிபர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதும் அவரை தக்கலைக்கு அழைத்து வந்து விசாரணை செய்ய முடிவு செய்துள்ளனர்.
பலியான வாலிபர் சஜாது கான் 4 நாட்களுக்கு முன்பு தான் திருவனந்தபுரம் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்