தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சிதிலமடைந்த தொகுப்பு வீடுகள்
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், முள்ளால் கிராமத்தில் உள்ள ஏழை-எளிய மக்கள் வீடுகள் இல்லாமல் தவிக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு காட்டிக்கொடுத்த தொகுப்பு வீடுகள் சீரமைக்கப்படாமல் மிகவும் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், முள்ளால், திருச்சி.
புதிய பாலம் அமைக்கப்படுமா?
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, பெட்டவாய்த்தலை பஞ்சாயத்து காமநாயக்கன்பாளையம் கிராமத்தில் மேலத்தெரு அய்யன் வாய்க்கால் பாலம் இடிந்து 3 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
ஜெயபால், காமநாயக்கன்பாளையம், திருச்சி.
குண்டும், குழியுமான சாலை
திருச்சி மாவட்டம், பிரம்பட்டியில் இருந்து பூலாம்பட்டி வரை தார் சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்களின் வாகனங்கள் அடிக்கடி பழுதாவதினால் அவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பூலாம்பட்டி, திருச்சி.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
திருச்சி குடிநீர் வடிகால் வாரிய அலுவலக நுழைவு வாயிலில் கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் தேங்கி நிற்கும் கழிவுநீரில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
மணிகண்டன், திருச்சி.