மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து ஒன்றியக்குழு கூட்டத்தில் இருந்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு
மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து ஒன்றியக்குழு கூட்டத்தில் இருந்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
மத்தூர்:
ஒன்றியக்குழு கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியக்குழு கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் விஜயலட்சுமி பெருமாள் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 17 கவுன்சிலர்களில் 16 பேர் கலந்து கொள்ள வந்திருந்தனர். கூட்டத்தின் பொருட்களை வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி வாசிக்க தொடங்கினார்.
அப்போது தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க. கவுன்சிலர்கள் அனைவரும் வட்டார வளர்ச்சி அலுவலர், கவுன்சிலர்கள் தேர்வு செய்யும் பணிகளை வேண்டும் என்றே நிராகரிப்பதாகவும், பல மாதங்கள் ஆகியும் 15-வது நிதிக்குழு திட்டங்களுக்கு நிர்வாக அங்கீகாரம் வழங்கவில்லை எனவும், வட்டார வளர்ச்சி அலுவலர் தன்னிச்சையாக செயல்படுவதாகவும் கூறி வெளிநடப்பு செய்தனர். இதனால் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சுணக்கம்
இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழியிடம் கேட்டபோது, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படியே திட்டப்பணிகளுக்கு முன்னுரிமை தர முடியும். ஒன்றியக்குழு தலைவர், அலுவலக பணிகள் தொடர்பாக தனது கணவரை கேட்க வேண்டும் என தன்னை வற்புறுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கவுன்சிலர்கள் இடையே மோதல் போக்கு காரணமாக ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைவாக செயல்படுத்துவதில் சுணக்கம் ஏற்பட்டு உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.