ஓசூரில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஓசூரில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓசூர்:
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓசூரில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஸ்ரீராம ரெட்டி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் நரசிம்மமூர்த்தி, மாவட்ட செயலாளர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட மகளிரணி தலைவி கிரிஜம்மா மற்றும் ஓசூர், சூளகிரி, தளி, கெலமங்கலம் ஒன்றியங்களை சேர்ந்த நிர்வாகிகள், விவசாயிகள் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி, அஞ்செட்டி ஆகிய தாலுகாக்களை பிரித்து, ஓசூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும். வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை அலுவலகங்களில் மானிய பொருட்களை தகுதியான அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும். மலைத்தோட்ட விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள பட்டாக்களை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.