வெவ்வேறு இடங்களில் 2 கார்கள் தீப்பிடித்து எரிந்தது
பொள்ளாச்சி அருகே வெவ்வேறு இடங்களில் 2 கார்கள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி
காரில் தீ விபத்து
கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த 5 பேர் வால்பாறை, ஆழியாறு பகுதிகளை சுற்றி பார்க்க காரில் வந்து கொண்டிருந்தனர். காரை தினேஷ் என்பவர் ஓட்டினார். இந்தநிலையில் பொள்ளாச்சி அருகே அங்கலகுறிச்சி கைகாட்டி பகுதியில் வந்த போது திடீரென்று காரின் முன் பக்கம் என்ஜினில் இருந்து புகை வந்தது.
இதை பார்த்த தினேஷ் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக காரை சாலையோரத்தில் நிறுத்தினார். இதற்கிடையே என்ஜின் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதை தொடர்ந்து 5 பேரும் காரில் இருந்து வேகமாக இறங்கினர். பின்னர் அக்கம், பக்கத்தில் உள்ள பொதுமக்கள் உதவியுடன் காரில் பிடித்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் காரின் முன் பக்கம் சேதமடைந்தது. புகை வந்ததும் காரை விட்டு இறங்கியதால் 5 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். காரில் தீப்பிடித்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ஆழியாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுல்தான்பேட்டை
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையை அடுத்த ஆமந்தகடவு பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 35). இவர் புதிதாக கார் ஒன்றை வாங்கினார். அவரிடம் கேட்டு காரை செலக்கரிச்சலை சேர்ந்த கணேசன் என்பவர் வெளியே எடுத்து சென்றார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சுல்தான்பேட்டை அருகே ஜல்லிபட்டி அருகே கார் சென்று கொண்டிருந்த போது, காரின் பின்பக்க டயரில் இருந்து புகை வந்தது.
பின்னர் திடீரென தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கணேசன் காரை நிறுத்தி விட்டு, கதவை திறந்து வெளியே சென்றார். சற்று நேரத்தில் கார் முழுவதும் தீ பரவி மளமளவென எரிந்தது.
தீ விபத்தில் கார் சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக கணேசன் உயிர்தப்பினார். பின்னர் சாலையில் இருந்து கார் கிரேன் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது.
இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.