லாரி மோதி ஜவுளிக்கடை ஊழியர் பலி
திருவாரூர் அருகே மகள் கண் முன்பு லாரி மோதி ஜவுளிக்கடை ஊழியர் உயிரிழந்தார். மேலும் நிற்காமல் சென்ற லாாியை பொதுமக்கள் விரட்டி பிடித்தனர்.
திருவாரூர்;
திருவாரூர் அருகே மகள் கண் முன்பு லாரி மோதி ஜவுளிக்கடை ஊழியர் உயிரிழந்தார். மேலும் நிற்காமல் சென்ற லாாியை பொதுமக்கள் விரட்டி பிடித்தனர்.
சைக்கிளில் சென்றனர்
திருவாரூர் அருகே பள்ளிவாரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி (வயது45). இவரது மனைவி ராணி(40). இவர்களுக்கு சவுமியா(21) என்ற மகளும், ஹரீஸ்வரன்(14) என்ற மகனும் உள்ளனர். திருவாரூரில் உள்ள ஜவுளிக்கடையில் வீரமணி வேலை செய்து வந்தார். மற்றொரு தனியார் நிறுவனத்தில் அவருடைய மகள் சவுமியா வேலை செய்து வருகிறார். தந்தை- மகள் இருவரும் வீட்டில் இருந்து சைக்கிளில் தினமும் வேலைக்கு சென்று வருவது வழக்கம்.
நேற்று காலை வீரமணியும் அவரது மகள் சவுமியாவும் தனித்தனி சைக்கிள்களில் தங்கள் வீடுகளில் இருந்து புறப்பட்டு வேலைக்கு திருவாரூர் நோக்கி சென்றனர்.
லாாி மோதி பலி
கேக்கரை அருகே இவர்கள் வந்த போது சவுடு மண் ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த லாரி வீரமணி ஓட்டி வந்த சைக்கிளின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த வீரமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தனது கண் முன்பு தந்தை விபத்தில் சிக்கி உயிரிழந்ததை கண்ட சவுமியா கதறி அழுதார். இதனால் அதிர்ச்சி அடைந்த லாரி டிரைவர் லாரியை நிறுத்தாமல் ஓட்டி சென்றார்.
உடனே அப்பகுதி மக்கள் லாரியை சிறிது தூரம் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.
அப்போது லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்தநிலையில் தந்தை உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சியில் இருந்த சவுமியா மயக்கமடைந்து விழுந்தார். உடனே அங்கிருந்த மக்கள் சவுமியாவின் முகத்தில் தண்ணீர் தெளித்து அவருக்கு ஆறுதல் கூறினர்.
சாலை மறியல்
விதிமுறை மீறி சவுடு மண் ஏற்றி செல்லும் லாரிகள் அதிவேகமாக செல்வதால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாகவும், வருவாய்த்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்தால் தான் இறந்தவர் உடலை எடுத்து செல்ல அனுமதிப்போம் என கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த திருவாரூர் தாசில்தார் நக்கீரன் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
டிரைவர் கைது
இதைத்தொடர்ந்து வைப்பூர் போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து வைப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவர் குரும்பேரி பகுதியை சேர்ந்த ராஜேஷ்பாபு(30) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.