சூறைக்காற்றால் வாழை, பப்பாளி, முருங்கை மரங்கள் முறிந்து விழுந்தன
சின்னசேலம் அருகே சூறைக்காற்றால் வாழை, பப்பாளி, முருங்கை மரங்கள் முறிந்து விழுந்தன.
சின்னசேலம்,
சின்னசேலம் பகுதியையொட்டியுள்ள கிராமங்களில் இன்று மாலை வானில் கருமேகங்கள் சூழ்ந்து, மழை பெய்வதற்கான சூழல் நிலவியது. அப்போது திடீரென சூறாவளி காற்று வீசியது. இந்த சூறைக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் தோட்டப்பாடி, தென்பொன்பரப்பி, பூண்டி, அம்மையகரம், மரவாநத்தம் ஆகிய கிராமங்களில் சாகுபடி செய்திருந்த பப்பாளி, வாழை, முருங்கை மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.இது குறித்து விவசாயிகள் கூறுகையில், பப்பாளி பயிர் சாகுபடி செய்ய ஏக்கருக்கு ரூ.1 லட்சம் செலவு செய்தால் ரூ.4 லட்சம் வருவாய் ஈட்டலாம். இதேபோல் ஒரு ஏக்கர் முருங்கை பயிர் சாகுபடிக்கு ரூ.25 ஆயிரம் செலவு செய்தால், ரூ,1 லட்சம் வரை வருவாய் கிடைக்கும். தற்போது மகசூல் விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் திடீர் காற்று வீசியதில் முற்றிலும் பயிர் சேதமாகி பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டது. இதனை கணக்கிட்டு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.