தேர்தல் முன்விரோதத்தில் இருதரப்பினர் மோதல்
உளுந்தூர்பேட்டை அருகே தேர்தல் முன்விரோதத்தில் இருதரப்பினர் மோதிக்கொண்டனர். இது தொடர்பாக 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசாரின் கண்ணெதிரே ரூ.40 லட்சம் மதிப்பிலான கார் அடித்து நொறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சன்(வயது 22). ஊராட்சி மன்ற உறுப்பினர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மில்க்யூர்(29) என்பவருக்கும் கடந்த ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலின்போது தகராறு ஏற்பட்டதால் முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்த நிலையில் ஜெய்சன், தனது தரப்பினர் மற்றும் நண்பர்களுடன் எறையூர் கிராமத்தில் உள்ள ஏரியில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு மில்க்யூர் தனது ஆதரவாளர்களுடன் வந்து ஜெய்சனை தாக்கினார். பதிலுக்கு ஜெய்சனும் தாக்கினர். இது முற்றி இருதரப்பினரிடையே மோதலாக மாறியது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதில் ஜெய்சன், மில்க்யூர் ஆகிய இருவரும் காயமடைந்தனர்.
17 பேர் மீது வழக்கு
இது குறித்து இருதரப்பினரும் எலவனாசூர்கோட்டை போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் கொடுத்தனர். அதன்பேரில் எறையூர் கிராமத்தை சேர்ந்த மில்க்யூர், ஜஸ்டின், ஜான் பிரிட்டோ, ரைமோன்ஸ், அலெக்சாண்டர், ஜார்ஜ், கொய்யாதோப்பு அலெக்சாண்டர், ரூபன், ஜெய்சன், எஸ்.ஆரோக்கியராஜ், ஜான் போஸ்கோ, லுர்தன் பால்ராஜ், டேவிட், ஜெ.ஆரோக்கியராஜ், கிறிஸ்துராஜ், ஆரோக்கியா அருள்நாதன், விக்டர் ஆகிய 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரை அடித்து நொறுக்கிய கும்பல்
மேலும் ஜெய்சன் மற்றும் மில்க்யூர் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ஜெய்சன் வீட்டில் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது 10 பேர் கொண்ட கும்பல் இரும்பு கம்பி, உருட்டு கட்டையுடன் அங்கு வந்தது. பின்னர் அந்த கும்பல் கண் இமைக்கும் நேரத்தில் அங்கு நிறுத்தி இருந்த ஜெய்சனுக்கு சொந்தமான ரூ.40 லட்சம் மதிப்பிலான காரை அடித்து நொறுக்கியது. போலீசாரின் கண்ணெதிரே நடந்த இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாகிறது.
விவசாயிக்கு 13 வெட்டு
இந்த நிலையில் ஜெய்சனின் தந்தை வின்சென்ட் பவுல்ராஜ்(45) நேற்று தனது விவசாய நிலத்துக்கு சென்றார். அப்போது மில்க்யூர் தம்பி ஜஸ்டின் தனது ஆதரவாளர்களுடன் சென்று வின்சென்ட் பவுல்ராஜை வழிமறித்து சரமாரியாக தாக்கினார். இதில் அவருக்கு 13 இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டது.
இதில் படுகாயமடைந்த அவர், உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர், மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் முன்விரோதத்தால் நடந்த இந்த மோதல் சம்பவத்தால் எறையூர் கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.