விக்கிரவாண்டி அருகே பட்டியல் ரசீது இல்லாத 19 மெட்ரிக் டன் உர மூட்டைகள் பறிமுதல்

விக்கிரவாண்டி அருகே பட்டியல் ரசீது இல்லாத 19 மெட்ரிக் டன் உர மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-05-09 17:14 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் சென்னை வேளாண்மை இயக்குனர் மற்றும் மாவட்ட கலெக்டர் மோகன் ஆகியோரின் அறிவுரைப்படி வேளாண் உதவி இயக்குனர் மற்றும் வேளாண்மை அலுவலர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டு அக்குழுவினர் உர விற்பனை நிலையங்கள், கலப்பு உரம் உற்பத்தி நிறுவனங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது விக்கிரவாண்டி அருகே கப்பியாம்புலியூரில் இயங்கி வரும் உர கலவை நிலையத்தில் விக்கிரவாண்டி வேளாண் உதவி இயக்குனர் மற்றும் வேளாண் அலுவலர்கள் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தபோது அந்த உர கலவை நிலையத்தில் இருந்து பட்டியல் ரசீது இல்லாமல் ஒரு லாரியில் 19 மெட்ரிக் டன் கலப்பு உரம் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து அந்த லாரி டிரைவரிடம் அதிகாரிகள் விசாரணை செய்ததில் அவரிடம் உரம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் ரசீதுகள் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, கலெக்டரின் அறிவுரைப்படி அந்த 19 மெட்ரிக் டன் கலப்பு உர மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து உர கலவை உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அந்த உரக்கம்பெனியை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட உரங்கள் தர பரிசோதனைக்காக மாதிரி எடுக்கப்பட்டு பிரம்மதேசம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்