வீட்டிலேயே பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ய மாத்திரை கொடுத்த தம்பதி

வேப்பூர் அருகே கருவில் உருவான சிசு பெண் என்று தெரிந்ததால் வீட்டிலேயே பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ய மாத்திரை வழங்கிய தம்பதி, சுகாதாரத்துறை அதிகாரிகளை கண்டதும் தப்பி ஓடிவிட்டனர்.

Update: 2022-05-09 17:07 GMT
சிறுபாக்கம், 

கடலூர் மாவட்டம் ராமநத்தத்தில் உள்ள ஒரு மருந்து கடையில் கருக்கலைப்பு செய்ததால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு பெரம்பலூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த வேல்முருகன் மனைவி அனிதா(வயது 27) என்பவர் கடந்த 7-ந்தேதி இறந்தார். 
தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த அதிர்வலை மறைவதற்குள் தற்போது மற்றொரு சம்பவம் அரங்கேறி உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

அதிகாரிகள் ஆய்வு 

வேப்பூர் அருகே மங்களூரில் உள்ள ஒரு வீட்டில் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்யப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு தலைமையிலான மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்வதற்காக நேற்று அந்த வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்தனர். இவர்களை கண்டதும், வீட்டில் இருந்து 2 பேர் தப்பி ஓடினர். 

கருவில் உருவான பெண் சிசு

அந்த வீட்டில் ஒரு பெட், கருக்கலைப்பு செய்வதற்காக பயன்படுத்தப்படும் மருந்து, மாத்திரைகள், அதற்கான உபகரணங்கள் உள்ளிட்டவை இருந்தன. கண் கலங்கிய நிலையில் 22 வயதுடைய ஒரு பெண் மட்டும் பெட்டில் இருந்தார். 
அவரிடம் நடத்திய விசாரணையில், திருமணமான அந்த பெண்ணுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும், மீண்டும் கர்ப்பமான அந்த பெண் கருவில் உருவான சிசு ஆணா?, பெண்ணா? என்று கண்டறிய ஒரு ஸ்கேன் மையத்திற்கு சென்றுள்ளார். அங்கு ஸ்கேன் செய்தவர், அந்த பெண்ணின் வயிற்றில் உருவாகி இருப்பது பெண் சிசு என்று கூறியுள்ளார். இதையடுத்து அந்த கருவை கலைப்பதற்காக இங்கு வந்ததும், கருக்கலைப்பு செய்வதற்காக அவர்கள் மாத்திரை கொடுத்து, பெட்டில் படுக்க வைத்திருந்ததும் தெரிந்தது. 

பெண்ணுக்கு தீவிர சிகிச்சை 

இதையடுத்து அந்த பெண்ணை மருத்துவக் குழுவினர் மீட்டு, சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், மங்களூரை சேர்ந்த குமார், அவரது மனைவி சித்ரா ஆகியோர் மருத்துவம் படிக்காமலேயே வீட்டில் கிளினிக் வைத்து அப்பகுதி மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்ததும், பெண்களுக்கு கருக்கலைப்பு செய்து வந்ததும், அதிகாரிகள் வீட்டிற்குள் நுழைந்ததை கண்டதும் தப்பி ஓடியதும் தெரியவந்தது. 

தம்பதிக்கு வலைவீச்சு 

இதனை தொடர்ந்து அந்த வீட்டில் இருந்து ஊசி, மருந்து, மாத்திரைகள், கருக்கலைப்பு செய்ய பயன்படுத்தப்படும் உபகரணங்கள் உள்ளிட்டவைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 
இதுகுறித்த புகாரின் பேரில் சிறுபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய குமார், சித்ரா ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர். 
வீட்டிலேயே பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்