சொத்து பிரச்சினையில் பெண் சுட்டுக் கொலை வழக்கில் ராணுவ வீரர் உள்பட 2 பேர் கைது
சொத்து பிரச்சினையில் பெண் சுட்டுக் கொலை வழக்கில் ராணுவ வீரர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்
பெங்களூரு: பாகல்கோட்டை மாவட்டம் குலேதகுட்டா கிராமத்தை சேர்ந்தவர் தியாமவ்வா ஹூக்கேரி (வயது 45). நேற்று முன்தினம் மதியம் அவர் தனது வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த முத்தப்பா (35) என்பவர் தியாமவ்வா வீட்டுக்கு சென்றுள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் 2 பேருக்கும் இடையே திடீரென்று வாக்குவாதம் உண்டானது. அப்போது ஆத்திரமடைந்த முத்தப்பா தன்னிடம் இருந்த துப்பாக்கியால் தியாமவ்வாவை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில், குண்டு காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். உடனே அங்கிருந்து முத்தப்பா, மற்றொரு நபர் ஓடிவிட்டனர்.தகவல் அறிந்ததும் பாகல்கோட்டை புறநகர் போலீசார் விரைந்து வந்து தியாமவ்வாவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.
அப்போது தியாமவ்வாவும், முத்தப்பாவும் நெருங்கிய உறவினர்கள் ஆவார்கள். அவர்களுக்குள் சொத்து பிரச்சினை காரணமாக தகராறு இருந்து வந்துள்ளது. இதே பிரச்சினையில் தியாமவ்வாவை முத்தப்பா துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்திருந்தார். ராணுவ வீரரான முத்தப்பா தற்போது ஐதராபாத்தில் பணியாற்றுகிறார். விடுமுறையில் சொந்த ஊருக்கு அவர் வந்திருந்ததும் தெரிந்தது. இதுகுறித்து பாகல்கோட்டை புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்தப்பா, அவருக்கு உதவியதாக இருந்த வடமாநிலத்தை சேர்ந்த சுக்லா (36) ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.