கரூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா
கரூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு முதியவர் தர்ணாவில் ஈடுபட்டார்.
கரூர்,
கரூர் மாவட்டம், பாகநத்தத்தை சேர்ந்த ரங்கசாமி (வயது 75). இவர் கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறும்போது, நான் எனது கிராமத்தில் விவசாய வேலை பார்த்து கொண்டு தனியாக வசித்து வருகிறேன். எனது சகோதரரின் சொத்தினை அவரது ஆயுளுக்கு பின் உடன்பிறந்த சகோதரர் ஆகிய எனக்கு உயில் ஆவணமாக பதிவு செய்துள்ளார். அவரது இறப்பிற்கு பின் அந்த வீட்டில் வாழ்ந்து வந்தேன். இந்நிலையில் சிலர் எனக்கு பாத்தியப்பட்ட சொத்தை போலியாக ஆவணங்களை உருவாக்கி அவர்களின் பெயருக்கு பரிவர்த்தனை செய்துள்ளனர். எனவே சொத்தை மீட்டு தர வேண்டும் என்றார்.
பின்னர் இதுகுறித்து கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் முறையிட்டார். அப்போது போலீஸ் சூப்பிரண்டு, உங்களது வீட்டிற்கு போலீசார் வந்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என உறுதியளித்தார்.