இந்து கோவில்களில் பக்தி பாடல்களை ஒலிபரப்பி போராட்டம்-ஸ்ரீராம சேனை அமைப்பினரால் பரபரப்பு
சிக்கமகளூருவில் 5 கோவில்களில் அதிகாலை 5 மணி முதலே பக்தி பாடல்களை ஒலிபரப்பி ஸ்ரீராம சேனை அமைப்பினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிக்கமகளூரு:
ஒலிப்பெருக்கி விவகாரம்
ஒலி மாசுபடுவதை தடுக்கும் வகையில் வழிப்பாட்டு தலங்கள், மசூதிகளில் அதிக ஒலி எழுப்பும் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளை அகற்றும்படி மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மேலும் மசூதிகளில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருக்கும் ஒலிப்பெருக்கிகளை அகற்றவேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின் எதிரொலியாக உத்தர பிரதேசம், மராட்டிய மாநிலங்களில் சில மசூதிகளில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த ஒலிப்பெருக்கிகள் அகற்றப்பட்டது.
அரசு நடவடிக்கை இல்லை
கர்நாடகத்தில் உள்ள மசூதிகளில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள ஒலிப்பெருக்கிகளை அகற்ற மாநில அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஸ்ரீராமசேனை அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக் கோரிக்கை வைத்திருந்தார்.
ஆனால் மாநில அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் மசூதிகளில் உள்ள ஒலிப்பெருக்கிகளை அகற்றும் வரை இந்து கோவில்களில் அனுமன் பாடல்கள், சுப்ரபாதம், ஓம்காரா அல்லது பக்தி பாடல்கள் ஒலிபரப்பப்படும் என்று பிரமோத் முத்தாலிக் கூறியிருந்தார்.
அதன்பேரில் நேற்று மாநிலத்தில் பல இடங்களில் இந்து கோவில்களில் அதிகாலையிலேயே பக்தி பாடல்கள், சுப்ரபாதம் ஒலிபரப்பி ஸ்ரீராமசேனை அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சிக்கமகளூருவில் பக்தி பாடல்
சிக்கமகளூரு நகரில் சங்கராபுரா பகுதியில் உள்ள கொங்கு நாட்டம்மா கோவில், கல்தொட்டி சிவன் கோவில் கோட்டை, கொல்லாபுரதம்மா கோவில், விஜயபுரா ஆஞ்நேயர் கோவில், பசவனஹள்ளி காமதேனு கணபதி கோவில் என 5 கோவில்களில் அதிகாலை 5 மணியில் இருந்தே கூம்பு ஒலிப்பெருக்கி வைத்து சுப்ரபாதம் ஒலிக்கப்பட்டது.
இது அதிகாலையில் தொழுகையில் ஈடுபட்ட முஸ்லிம்களுக்கு பெரும் இடையூறை ஏற்படுத்தியது. இருப்பினும் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படவில்லை. அதே நேரம் பக்தி, பாடல்கள் மற்றும் சுப்ரபாதம் ஒலிக்கப்பட்ட கோவில்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனால் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.
தொடரும் போராட்டம்
இந்த போராட்டம் இன்றும் (செவ்வாய்க்கிழமை) தொடரும் என்று ஸ்ரீராமசேனா அமைப்பினர் தெரிவித்துள்ளனர். மசூதிகளில் உள்ள கூம்பு ஒலிப்பெருக்கிகளை அகற்றும் வரை ஒவ்வொரு நாளும் அதிகாலை தொடங்கி தினமும் 3 வேளையிலும் சுப்ரபாதம், பக்தி பாடல்கள் ஒலிபரப்பப்படும் என்று அந்த அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.