அவினாசி,
வரலாற்று சிறப்புமிக்க அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டம் வருகிற 12-ந் தேதி முதல் 14-ந்தேதி வரை நடக்கிறது. இந்த நிலையில் சண்டிகேஸ்வரர் தேர் வெள்ளோட்டம் நேற்று மாலை நடந்தது. பஞ்சமூர்த்திகள் 63 நாயன்மார்கள் வழிபாட்டு குழு அறக்கட்டளை சார்பில் சண்டிகேசுவர பெருமானுக்கு புதியதாக தேர் செய்யும் பணி கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கியது. 18 அடி உயரம் 4.25 டன் எடை அளவில் உறுவாக்கப்பட்டுள்ள இத்தேரில் கோவில் தலபுராணங்களை உணர்த்தும் வகையில் கருணாம்பிகை வழிபாடு, நாககன்னி வழிபாடு, துறவிமுக்தி அடைதல், சண்டிகேஸ்வரருக்கு பட்டம் சூட்டுதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு சிற்ப வேலைப்பாடுகளுடன் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது.
சிறப்பு வாய்ந்த இத்தேர் வெள்ளோட்டம் நேற்று மாலை நடந்தது. முன்னதாக தேருக்கு புண்யாகவாசனை, பஞ்சகவ்ய பூஜைகள் நடந்தது. இதையடுத்து பெரிய தேர் நிலை அருகிலிருந்து சண்டிகேஸ்வரர் தேர் இழுக்கப்பட்டு நான்கு ரதவீதி வழியாக வலம் வந்தது. நிகழ்ச்சியில் சிறுவர், சிறுமிகள் உள்பட திரளான பக்தர்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.