கெங்கையம்மன் கோவில் திருவிழா பாதுகாப்பு பணியில் 1,000 போலீசார்

குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழா பாதுகாப்பு பணியில் 1,000 போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று டி.ஐ.ஜி. ஆனி விஜயா தெரிவித்தார்.

Update: 2022-05-09 16:06 GMT
குடியாத்தம்

குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழா பாதுகாப்பு பணியில் 1,000 போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று டி.ஐ.ஜி. ஆனி விஜயா தெரிவித்தார்.

டி.ஐ.ஜி. ஆய்வு

குடியாத்தம் நெல்லூர்பேட்டை கருப்புலீஸ்வரர் கோவில் தேரோட்டம் நாளையும் (புதன்கிழமை), கெங்கையம்மன் கோவில் தேரோட்டம் சனிக்கிழமையும், சிரசு திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
இந்த விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா ஆய்வு செய்தார். அப்போது  கெங்கையம்மன் கோவில் மற்றும் தேர் செல்லும் பாதைகள், அம்மன் சிரசு ஊர்வலம் செல்லும் பாதைகளை ஆய்வு செய்தார் .

ஆய்வின்போது குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சிலம்பரசன், மணிகண்டன், கோவில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு உள்பட பலர் உடனிருந்தனர். தொடர்ந்து குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

1,000 போலீசார்

கருப்புலீஸ்வரர் கோவில் தேரோட்டம், கெங்கையம்மன் கோவில் தேரோட்டம் மற்றும் சிரசு திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பான முறையில் செய்யப்படும். கெங்கையம்மன் சிரசு நடைபெறும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும், அன்று பவுர்ணமி என்பதாலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், போக்குவரத்து நெரிசல் இல்லாமல் ஒழுங்குபடுத்தவும் வேலூர் சரகத்திற்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்