கலெக்டர் அலுவலகத்தில் புகுந்த பாம்பு தீயணைப்பு படையினர் பிடித்தனர்
கலெக்டர் அலுவலகத்தில் புகுந்த பாம்பை தீயணைப்பு படையினர் பிடித்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதையொட்டி திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர். இந்த நிலையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பூங்காவை நோக்கி பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. இதைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் அந்த பாம்பு பூங்காவுக்குள் சென்று பதுங்கியது. பின்னர் தீயணைப்பு படை வீரர்கள் பூங்காவில் சோதனையிட்டு அங்கு புதருக்குள் பதுங்கி இருந்த பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அந்த பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.