புதுமண தம்பதி காரில் கடத்தல் பெண்ணின் உறவினர்கள் 7 பேர் கைது

வெள்ளிச்சந்தை அருகே காதல் திருமணம் செய்த புதுமண தம்பதியை காரில் கடத்தி சென்ற பெண்ணின் உறவினர்கள் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-09 15:05 GMT
ராஜாக்கமங்கலம், 
வெள்ளிச்சந்தை அருகே காதல் திருமணம் செய்த புதுமண தம்பதியை காரில் கடத்தி சென்ற பெண்ணின் உறவினர்கள் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த பரபரப்பு சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
புதுமண தம்பதி
குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே உள்ள பேயோடு பகுதியை சேர்ந்தவர் ரெகு. இவருடைய மகன் அரவிந்த் (வயது 23). இவர் பேயோட்டில் உள்ள ஒரு ஒர்க் ஷாப்பில் வேலை பார்த்து வருகிறார். தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் இந்திரா நகரை சேர்ந்த டாப்னி (20) என்பவரை அரவிந்த் காதலித்து வந்துள்ளார்.
இந்த காதலுக்கு பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் பெற்றோரின் எதிர்ப்பை மீறி டாப்னி, அரவிந்த்தை கடந்த 4-ந் தேதி திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் அரவிந்த் வீட்டில் வசித்து வந்தார். இதனை அறிந்த டாப்னி குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சிலர் நேற்று முன்தினம் பேயோடுக்கு காரில் வந்தனர்.
காரில் கடத்தல்
அங்கு வீடு புகுந்து அரவிந்த், டாப்னியை காரில் கடத்தி சென்றனர். உடனே அரவிந்த்தின் உறவினர்கள் வெள்ளிச்சந்தை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 
பிறகு மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். மேலும் போலீசார் அந்த காரை பின்தொடர்ந்து துரத்தி சென்றனர். நாங்குநேரி சோதனைச்சாவடியில் வைத்து அவர்களை மடக்கினர்.
7 பேர் கைது 
பின்னர் அனைவரையும் போலீசார் வெள்ளிச்சந்தை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இந்த சம்பவம் குறித்து அரவிந்த்தின் தாய் ஷீலா வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். 
அந்த புகாரின் பேரில் டாப்னியின் உறவினர்கள் ஆசிக் (22), சுரேஷ் தனசிங் (40), டினோ (19), மகேந்திரன் (25), பாரதி முகேஷ் (23), ஜான்சி (38), நளின் காயத்ரி (20) ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்