திருச்செந்தூர் அருகே பள்ளி மாணவர்களுக்கு கறிவிருந்து வைத்து அசத்திய ஆசிரியர்கள்
திருச்செந்தூர் அருகே நல்லுறவை மேம்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு கறிவிருந்து வைத்து ஆசிரியர்கள் அசத்தி உள்ளனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு நேற்று கறிவிருந்து வைத்து ஆசிரியர்கள் அசத்திய நிகழ்ச்சி நடந்துள்ளது. ஆசிரியர்கள்-மாணவர்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் நடந்த இந்த விருந்து உபசரிப்பை பொதுமக்கள் பாராட்டினர்.
கறிவிருந்து
திருச்செந்தூர் அருகே கீழநாலுமூலைகிணறு பஞ்சாயத்து யூனியன் அரசு நடுநிலைப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு 6 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
கொரோனா தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடைபெற்றுவருகின்றனர். இந்நிலையில் மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும், மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே நல்லுறவு ஏற்படுத்தும் வகையிலும் மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் கறி விருந்து வைக்க திட்டமிட்டனர்.
மாணவர்கள் உற்சாகம்
இதையடுத்து நேற்று மதியம் ஆசிரியர்கள், அனைத்து மாணவர்களுக்கும் நெய்சோற்றுடன் கறி விருந்து வைத்தனர். இதில் கலந்து கொண்ட மாணவர்கள் மகிழ்ச்சியாக கறி விருந்தினை சுவைத்து மகிழ்ந்தனர். உற்சாகமாக விருந்து சாப்பிட்ட மாணவர்கள் ஆசிரியர்களுக்கு நன்றி கூறினர். இதில், பள்ளி தலைமை ஆசிரியை இந்திராணி, பள்ளி ஆசிரியர்கள் ஜெயந்தி,பிரபாவதி, கியூஸ் ஹெப்சிபா, ஞானதீபம் எமி, தர்மராஜ் உள்பட ஊர்பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
பொதுமக்கள் பாராட்டு
ஆசிரியர்கள்-மாணவர்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த கறிவிருந்து நிகழ்ச்சியை பொதுமக்கள் பாராட்டினர்.