கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திண்டுக்கல்:
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு வட்டார தலைவர் மரியசேவியர்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் குமரம்மாள், வட்டார பொருளாளர் காளியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதிய தொகையாக ரூ.7 ஆயிரத்து 850 வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு எந்தவித பிடித்தமும் இல்லாமல் பணப்பலன்களை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
பழனி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் வேலுச்சாமி தலைமை தாங்கினார். இணை செயலாளர் பெரியசாமி, வட்டார தலைவர்கள் ஜீவரத்தினம் (பழனி), தமிழ்செல்வி (தொப்பம்பட்டி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் மங்களபாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் பழனி, தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.