காவேரிப்பட்டணம் பகுதியில் குண்டு மல்லி பூக்கள் விலை வீழ்ச்சி

காவேரிப்பட்டணம் பகுதியில் குண்டு மல்லி பூக்கள் விலை வீழ்ச்சியால் கவலை அடைந்த விவசாயிகள் அவற்றை சாலையோரம் கொட்டி சென்றனர்.

Update: 2022-05-09 05:12 GMT
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் பகுதியில் குண்டு மல்லி பூக்கள் விலை வீழ்ச்சியால் கவலை அடைந்த விவசாயிகள் அவற்றை சாலையோரம் கொட்டி சென்றனர்.
பூக்கள் சாகுபடி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், காவேரிப்பட்டணம், திம்மாபுரம், மலையாண்டஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் குண்டு மல்லி பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பூக்கள் பெங்களூரு மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது. தற்போது குண்டு மல்லி பூக்கள் சீசன் தொடங்கியுள்ள நிலையில் தினமும் 50 டன் அளவிற்கு அறுவடை செய்யப்படுகின்றன. 
ஆனால் காலை நேரத்தில் அறுவடை செய்யும் மல்லி பூக்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால், ஒரு கிலோ ரூ.300 வரை விற்பனை ஆகிறது. ஆனால் மாலையில் அறுவடை செய்யும் பூக்கள் ரூ.100 முதல் ரூ.150 வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. குண்டு மல்லி பூக்கள் விலை வீழ்ச்சியால் கவலை அடைந்த விவசாயிகள் பூக்களை சாலையோரம் கொட்டி செல்கின்றனர். 
குளிர்பதன கிடங்கு
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், காவேரிப்பட்டணம் பகுதியில் குண்டு மல்லி பூக்கள் விளைச்சல் அதிகமாக உள்ளது. இவற்றை விவசாயிகள் பறித்து மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்ததால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் சாலையோரம் கொட்டி செல்கின்றனர். நறுமணத்தில் முதலிடம் வகிக்கும் குண்டு மல்லி பூக்களுக்கு, போதிய விலை கிடைக்காததால், விவசாயிகளுக்கு மணம் வீசாமல் மன வருத்தம் அளிப்பதாக வேதனையுடன் தெரிவித்தனர். 
எனவே பூக்களை சேமித்து வைக்க அரசு குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும். மல்லிகை பூக்களை மதிப்புக்கூட்டு பொருளாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்