கோபி அருகே விபத்தில் வாலிபர் பலி; நண்பர் படுகாயம்
கோபி அருகே நடந்த விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.
கடத்தூர்
கோபி அருகே நடந்த விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.
விபத்து
அந்தியூர் அண்ணா வீதியைச் சேர்ந்தவர் ஜெயபால். இவருடைய மகன் ஞானசுந்தரம் (வயது 24). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். திருமணமாகாதவர். இவருடைய நண்பர் மூர்த்தி (28). ஞானசுந்தரமும், மூர்த்தியும் மோட்டார்சைக்கிளில் கோபி அருகே உள்ள கொடிவேரி அணைக்கு சுற்றுலா சென்றனர். பின்னர் அணையை சுற்றி பார்த்துவிட்டு சாப்பிடுவதற்காக அரசூர் சென்று கொண்டிருந்தனர்.
மோட்டார்சைக்கிளை ஞானசுந்தரம் ஓட்டினார். மூர்த்தி அவருக்கு பின்னால் உட்கார்ந்து இருந்தார். மங்களபுரம் என்ற இடத்தில் சென்றபோது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் ரோட்டு ஓரத்தில் இருந்த நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான அறிவிப்பு பலகையில் மோதியது.
சாவு
இதில் ஞானசுந்தரமும், மூர்த்தியும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் ஞானசுந்தரம் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கடத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ஞானசுந்தரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த மூர்த்தியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.