சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் கைதான நீர்ப்பாசனத்துறை என்ஜினீயர் பணி இடைநீக்கம்

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கில் கைதான நீர்ப்பாசனத்துறை என்ஜினீயர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஹாசனில் 2 பேரை கைது செய்து சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2022-05-08 21:04 GMT
பெங்களூரு:சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கில் கைதான நீர்ப்பாசனத்துறை என்ஜினீயர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஹாசனில் 2 பேரை கைது செய்து சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு

கர்நாடகத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் நடந்த முறைகேடு குறித்து சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ்காரர்கள், பா.ஜனதா பெண் பிரமுகர், காங்கிரஸ் பிரமுகர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது முறைகேடு தொடர்பாக ஏராளமான தகவல்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளது.

அதாவது கலபுரகி மற்றும் பெங்களூருவில் உள்ள தேர்வு மையங்களில் தான் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், தார்வார், ஹாசன், துமகூருவிலும் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் போலீசாருக்கு கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

திவ்யா வீட்டில் சோதனை

ஹாசன் மாவட்டத்திற்கு நேற்று சென்ற சி.ஐ.டி. போலீசார், சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 2 பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் பெயர் கேசவ மூர்த்தி, வெங்கடேஷ் என்பதாகும். இவர்களில் கேசவமூர்த்தி கிராம பஞ்சாயத்து தலைவர் ஆவார். அவர்களிடம் சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் மூளையாக செயல்பட்டதாக கைதாகி உள்ள பா.ஜனதா பிரமுகர் திவ்யா வீட்டில் நேற்று சி.ஐ.டி. போலீசார் சோதனை நடத்தினார்கள். கலபுரகி மாவட்டம் சேடத்தில் உள்ள திவ்யா வீட்டில் சோதனை நடத்தப்பட்டு இருந்தது. இந்த சோதனையின் போது முறைகேடு தொடர்பாக முக்கிய ஆவணங்கள் போலீசாருக்கு கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பணி இடைநீக்கம்

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் கலபுரகியில் நீர்ப்பாசனத்துறை என்ஜினீயராக இருந்த மஞ்சுநாத் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மஞ்சுநாத்தை பணி இடைநீக்கம் செய்து நீர்ப்பாசனத்துறை முதன்மை என்ஜினீயர் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கு முன்பு மஞ்சுநாத்தை பெங்களூரு அன்னபூர்னேஷ்வரி நகர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருந்தார்கள்.

அப்போது தான் சிறையில் அடைக்கப்பட்டு இருந்ததை மறைத்து உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருவதாக நீர்ப்பாசனத்துறைக்கு மஞ்சுநாத் கடிதம் எழுதி இருந்தார். சிறைவாசம் அனுபவித்து வந்தது பற்றி தெரியாமல், அவருக்கு மூத்த அதிகாரிகள் மருத்துவ விடுமுறை அளித்திருந்ததும் தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.

டி.ஜி.பி. தலைமையில் தனிக்குழுக்கள் அமைப்பு

கர்நாடகத்தில் நடந்த சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு குறித்து விசாரிக்க தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சி.ஐ.டி. போலீஸ் டி.ஜி.பி. எம்.எஸ்.சந்து தலைமையில் ஒரு குழுவும், சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. உமேஷ்குமார் தலைமையில் மற்றொரு குழுவும் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த குழுக்களில் 2 போலீஸ் சூப்பிரண்டுகள், 10 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 12 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸ்காரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் செய்திகள்