பாலப்பணிகளை கலெக்டர் ஆய்வு
பாலப்பணிகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு மேற்கொண்டார்
தஞ்சாவூர்
தஞ்சை மாவட்ட நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தின் கீழ் தஞ்சை கல்லணை கால்வாயின் குறுக்கே இர்வின் பாலத்திற்கு மாற்றாகவும், கரந்தை பகுதியில் வடவாற்றின் குறுக்கேயும் பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலப்பணிகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தஞ்சை மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 14 தரைப்பாலங்கள் உயர்மட்ட பாலங்களாக ரூ.20 கோடியே 30 லட்சம் செலவில் கட்டப்பட்டு வருகிறது. அதன்படி தஞ்சை மாநகரில் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைக்கும் வண்ணமும், வாகன விபத்துகளை முற்றிலுமாக தடுக்கும் வகையிலும் தற்போதைய சாலையை நான்கு வழிச்சாலையாக பயன்படுத்தும் வகையில் கல்லணை கால்வாயின் குறுக்கே தற்போது அமைந்துள்ள இர்வின் பாலத்திற்கு மாற்றாக 35.2 மீ நீளம் மற்றும் 10.5 மீ அகலம் கொண்ட இரு வழிப்பாதையாக நடைபாதையுடன் கூடிய இரு பாலங்கள் ரூ.3 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது.
ஜூன் 1-ந்தேதிக்குள் முடிவடையும்
இதேபோன்று, வடவாற்றின் குறுக்கே 21.5 மீட்டர் நீளம் மற்றும் 10.5 மீ அகலம் கொண்டதாக, நடைபாதையுடன் கூடிய இரு பாலங்கள் ரூ.3.68 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலப்பணிகள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் 15-ந்தேதி தொடங்கியது. இந்தப்பணிகளை ஜூன் 1-ந்தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை அலகின் மூலம் திருவையாறு நகருக்கு 6,754 கி.மீ. நீளத்திற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணிக்கு ரூ.191.33 கோடி மதிப்பிற்கு சாலை பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. மேலும் நிலயெடுப்பு பணிகளுக்காக ரூ.22.03 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சுற்றுலா வளர்ச்சியகம் திட்டத்தின் கீழ் 121.235 கி.மீ நீளமுள்ள 14 சாலை பணிகளுக்கு ரூ.10 கோடியே 12 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பீட்டில் திட்டம் தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
தரம் உயர்வு
நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் அலகின் மூலம் ரூ.114.515 கி.மீ நீளமுள்ள 67 ஊராட்சி ஒன்றிய சாலைகளை மாவட்ட இதர சாலையாக தரம் உயர்த்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாலசுப்ரமணியம், உதவிகோட்டப்பொறியாளர் ரேணுகோபால், உதவி பொறியாளர் மோகனா, மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம், தாசில்தார் மணிகண்டன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.